வினைப்பயன்களும் காசி, பிரயாகை, திரிவேணி யாத்திரைப் பலன்களும்

    காசி தலத்தில் மடிந்தால் அந்தக் கணமே மோட்சம் அடைவான். பாபாத்மாவாக உள்ளவன் இங்கே மடிந்தால், சில பிறவிகளை எடுத்துத் தன் பாபங்களைக் கழித்துப் பிறகே மோட்சம் அடைவான். காசிப் பதியில் பாபஞ் செய்தவன் பைசாச ரூபத்தை அடைவான். அத்;தகையன் பைசாச ரூபத்தை அடைந்து, கால பைரவ மூர்த்தியால் பத்தாயிரம் ஆண்டுகள் தண்டிக்கப் பட்டுக் கஷ்டம் அடைந்து, அதன் பிறகே மோட்சம் அடைவான். காசிப் பதியில் பாபஞ் செய்தவனாயினும் இதர இடங்களிலும் உள்ள பாவிகளின் கதி இதுவேயாகும். எனவே இதையறிந்து இந்த அவிமுக்தப்பதியை அடையவேண்டும். அவ்வாறு அடைந்து எம்மைச் சேவித்துக் கொண்டிருப்பவன் இறுதியில் மோட்சமடைவான். பிராயச்சித்தங்களால் அழியாத கர்மங்களைச் செய்தவன் கற்பகோடி காலங்கழிந்தாலும் அதை அனுபவித்தேயாக வேண்டும். அசுபமான பாபகர்மங்கள் ஒருவனை நரகத்தையடையச் செய்தும் விடும். புண்ணிய கருமங்கள் சுவர்க்காதிலோகங்களை அடையச் செய்யும். புண்ணிய கர்மங்கள், பாப கர்மங்கள் ஆகியவை கலந்த மிஸ்ர கர்மங்கள் உலகில் மனிதர்கள், பசுக்கள், பறவைகள் முதலிய பிறவிகளை அடையச் செய்யும். தான் அடைந்த பிறவி உயர்ந்ததாயினும் தாழ்ந்ததாயினும் புண்ணிய பாபங்கள் நசித்தாலன்றி முக்தியையளிக்க மாட்டாது. அவை இரண்டும் ஒழிந்த பிறகே மோட்சம் உண்டாகும்.

நற்கருமங்கள் மூவகைப்படும். அவைகளில் பஞ்சக் குரோச சேத்திரம் (காசி) முதலிய புண்ணியபூமியில் பிரவேசம் செய்தல், தியான பூஜைகளால் வருவன ஒன்று. கர்ம நிவாரணப்படிப் பிராயச்சத்தங்களைச் செய்து கொண்டு பாபங்களை ஒழித்தல் இரண்டு. சர்வ கர்மங்களும் நீங்குவதற்காக என்னிடமே தன் கிரியைகளையெல்லாம் சமர்ப்பித்து, என்னைச் சேவித்துக் கொண்டு இந்த சேத்திரத்திலேயே வாசஞ் செய்வது என்பது மூன்றாவதாகும். இவற்றால் பாபங்கள் நீங்கும்.

கர்மங்கள் மூவகைப்படும். அவை சஞ்சிதம், பிராரத்வம், ஆகாமியம் எனப்படும். அவற்றில் பூர்வ ஜன்மத்தில் செய்தவை சஞ்சிதம். அந்தச் சஞ்சித வினையால் வேறு பிறவியை அடைந்து அனுபவித்தப் புகும் சுபாசுப கர்மமே ஆகாமியம். அந்த ஆகாமியம் உடலால் அனுபவிக்கப்படும்போது பிராரத்துவம் என்பர். இந்தப் பிராரத்துவமானது அனுபவியாமல் நாசமடையாது. பாபமில்லாமலே எந்தத் தேகத்திற்கும் கஷ்டம் வராது. துக்கமயமாகக் காணப்படும் யாவுமே பாபமயந்தான் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்தத் துக்கம் ஸ்தூல துக்கம், சூக்கும துக்கம் என்ற இருவகையாக, அந்தப் பாபத்தாலேயே உண்டாகும். பாபமே இல்லாவிட்டால் எந்தக் காலத்தி;லும் ஒருவன் சுகமாகவே இருப்பான். ஓரிடத்தில் சுபமே விருத்தியாகும். ஓரிடத்;தில் பாபமே நசித்திருக்கும். ஓரிடத்;தில் பாபங்களே விருத்தியாகிக் கொண்டிருக்கும். இக்கர்மங்கள் எல்லாம் நலிய வேண்டுமானால் காசி நகரத்தைவிட வேறு ஓர் இடமும் கிடையாது. உலகத்தில் பற்பல புண்ணிய சேத்திரங்கள் இருந்தாலுங்கூட காசியம்பதியிலே வாசஞ் செய்ய வேண்டும் என்று நினைப்பவருக்கு அது விசேஷப் பிரயாசையோடும் கிடைப்பதற்கு அரிது. ஒருவன் காசிக்குப் போக வேண்டும் என்று நூறு பிறவிகளில் முயன்றாலுங்கூட அந்தப் புண்ணிய தலத்தை தரிசிக்க அவனுக்கும் பற்பல தடைகள் ஏற்படும்.

காசித் தலத்தை அடைந்து கங்காஸ்நானம் செய்பவன் ஆகாமிய சஞ்சிதங்களை ஒழிப்பானாயினும் உடல் உள்ளவரையில் விடாமல் அவை தொடருமாதலால் பிராரத்துவத்தை அனுபவித்தே தீரவேண்டும். அங்கே மரணமடைந்தவனுக்குப் பிராரத்துவம் ஒழியும். மரணம்  அடையும் போது ஒருவனுடைய மனமானது அவனது கர்ம வசத்துக்கேற்பவே இயங்கும். அந்தக் கர்மத்திற்கு மூன்று பாவங்கள் உண்டு. அவை மூன்றும் காசியை அடைந்தபோதே காலொடிந்து பின்தொடரக் கூடாதவையாக ஆகின்றன. அவனது மனமும் அந்தத் தீர்த்தத்திலே ஐக்கியப்பட்டு விடும் தீர்த்த ஸ்நானப் பலனும் அந்தத் தலத்தின் சிறப்பால் சிவத்தியானஞ் செய்த பயனும் ஆகிய இரண்டு பயன்களின் வலிமையால் மோட்சம் கிட்டும் என்று சுருதிகள் சொல்லுகின்றன.

முதலாவதாகக் காசியாத்திரை செய்து அதன் பிறகு பாபஞ் செய்தவன், முன்பு தான் செய்த காசி யாத்திரையின் புண்ணியத்தால் அந்தப் பாபம் நீங்கும் பொருட்டு மீண்டும் அவன் அந்தக் காசித் தலயாத்திரை செய்யும்படிப் பலவந்தமாகக் கொண்டு செல்லப் பெற்று சகல பாபங்களையும் தீப்பொறி சிதறி விழுந்த பஞ்சுப் பொதி போல தகிக்கச் செய்வான். ஆகையால் கர்ம நிர்மூலம் செய்யத் தக்கதான காசித்தலத்தை எவ்வாறாவது முயன்று சேவிக்க வேண்டும்.

இவ்வாறு சிவபெருமான் சொல்ல பார்வதிதேவி அவரை நோக்கி மீண்டும் வினவலானாள்.

 ‘நாதா! பிரயாகையில் உயிரை விட்டவன் தன் இஷ்ட காமியங்களை அடைவான் அல்லவா? திரிவேணி (கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகள் கலக்கின்ற பகுதியில்) திரிவேணி பூஜையும் விஸ்வேஸ்வர பூஜையும் செய்து, காசித்தலத்தில் இறந்தவர்கள் அடையும் பயன் யாது? பிரயாகை இஷ்டகாமியங்களைக் கொடுப்பது, காசி முத்தியைக் கொடுப்பது, பிரயாகையில் மாதவன்  இஷ்டகாமியங்களைக் கொடுக்க, காசியில் நீங்கள் முக்தியைக் கொடுக்கவும் இருக்கிறீர்கள். நீங்கள் சர்வ மங்கள ஸ்வரூபியாகையால், இந்தச் சந்தேகத்தைப் போக்கியருள வேண்டும்!’

பார்வதி! காசியில் இறந்தவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. பிரயாகையில் இறந்தவனுக்கு இஷ்டகாமியங்கள் கைகூடுவதும் நிச்சயம். காசிக்கு வந்து பிறகு பிரயாகைக்குப் போவதானால் காசி யாத்திரை செய்த பயன் வீணாகி விடும். பிரயாகைக்குப் போகாவிட்டால் திரிவேணி சங்கம தரிசன பயனில்லாமற் போகும். பிரயாகையி;ல் இறந்தாலும் மோட்சகாமியாக இருப்பானாயின் அங்கேயே முக்தியும் கைகூடும். இவ்வாறேயன்றி வேறல்ல என்று சிவபெருமான் கூறினார். பார்வதிதேவி மகிழ்ச்சியடைந்தாள். அது முதல் சிவபெருமான் விஸ்வநாதர் என்ற பெயருடன் பார்வதி பிரமதகண சகிதமாகக் காசித்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s