மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

Mahaviraசமணர், வர்த்தமானரை மகா வீரர் என்பர். அவர், அவர்களுடைய சமயத் தலைவராவார்.

வர்த்தமானர் கி.மு. 599 இல் வடகிழக்கு இந்தியாவில் பிறந்தார். கௌதம புத்தர் பிறந்த பகுதியிலே பிறந்தார். ஆயினும் ஒரு தலைமுறைக்கு முன்னதாகப் பிறந்தார். இருவரின் வாழ்க்கை வரலாறும் வியத்தகு வகையில், ஒன்று போல் அமைந்துள்ளது. வர்த்தமானர் அரச குடும்பத்தை சேர்ந்தவர்; தந்தையின் இளைய மகன். கௌதமரைப் போலவே செல்வச் சூழ்நிலையில் வளர்ந்தார். அவர் தமது 30 ஆம் வயதில் சொத்து, குடும்பம் (அவருக்கு மனைவியும் மகளும் இருந்தனர்). செல்வச் சூழ்நிலை அனைத்தையும் துறந்து, ஆன்மிக வழியில் உண்மையையும் நிறைவையும் காணத் துணிந்தார்.

வர்த்தமானர் கடுந்தவம் செய்துவந்த சிறிய பார்ஸ்வனத் துறவியர் குழாத்தில் சேர்ந்தார். 12 ஆண்டுகளாக ஆழ்ந்த தியானத்திலும், சிந்தனையிலும் ஈடுபட்டார். அப்போது கடுந்தவம் செய்து வறுமையில் வாழ்ந்து வந்தார். அடிக்கடி நோன்பிருந்தார். தமக்கென்று சொத்து எதுவும் வைத்திருக்கவில்லை. நீர் பருகுவதற்கு கிண்ணமோ, பிச்சையெடுப்பதற்கு தட்டோ கூட வைத்திருக்கவில்லை. தொடக்கத்தில் ஒரேயொரு ஆடை வைத்திருந்தார். பிறகு அதையும் துறந்து முற்றிலும் ஆடையின்றியே நடந்து திரிந்தார். பூச்சிகள் தம் வெறும் உடல் மீது ஊர்ந்து திரியுமாறு விட்டுவிட்டார். அவை அவரைக் கடித்த போதிலும் அவற்றைத் தள்ளிவிட மாட்டார். சுற்றித் திரியும் துறவோர் மேல்நாடுகளைவிட மிகுதியாக காணப்படும் இந்தியாவில்கூட மகாவீரரின் தோற்றத்தையும் நடத்தையையும் கண்டு சிலர் அவரை பழித்து உதைத்தனர். ஆயினும் அவர் அவற்றைப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார்.

மகா வீரர் தமது 42 ஆம் வயதில் தாம் ஆன்மிக அறிவொளி பெற்றதாக உணர்ந்தார். தமது வாழ்க்கையின் எஞ்சிய 30 ஆண்டுகளைத் தாம் கண்டறிந்த ஆன்மிக உண்மைகளை போதிப்பதிலே கழித்தார். கி.மு. 527 இல் அவர் இறந்தபோது அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர்.

சில வகைகளில் மகா வீரருடைய கோட்பாடுகள் பௌத்த, இந்து சமயக் கோட்பாடுகளை ஒத்துள்ளன. ஒரு மனிதனின் உடல் இறக்கும்போது அவனுடைய ஆன்மா இறப்பதில்லை எனவும், அது மறுபிறவி எடுக்கிறது (அப்பிறவி மனிதப் பிறவியாக இருக்கத் தேவையில்லை) எனவும் சமணர்கள் நம்புகின்றனர். இம்மறுபிறப்புக் கொள்கை சமணக் கோட்பாட்டின் அடிப்படைகளுள் ஒன்றாகும். ஒரு செயலின் நெறிமுறைகள் விளைவுகள் அடுத்த பிறவியைப் பாதிக்குமெனும் பிறவிப் பயன் கொள்கையைச் சமணர் நம்புகின்றனர். ஆன்மாவின் திரண்டுள்ள தீவினைப் பளுவைக் குறைத்து, அதனால் ஆன்மாவைத் தூய்மையாக்குவதே சமண சமயத்தின் முதன்மையான குறிக்கோள். புலனுகர்வு இன்பத்தை ஒறுத்தலின் மூலம் இதை ஓரளவு செய்ய முடியுமென்று மகா வீரர் கற்பித்தார். குறிப்பாக, சமணத்துறவிகள் கடுந்தவம் செய்யக் கடமைப்பட்டுள்ளனர். பட்டினி கிடந்து இறத்தல் புகழ்ச்சிக்குரியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக சமண சமயம் இன்னா செய்யாமைக் கொள்கையை வலியுறுத்துகிறது. இன்னா செய்யாமை என்பது மனிதருக்கு மட்டுமல்லாமல் பிற உயிரினங்களுக்கு இன்னா செய்யாமையாகும் எனச் சமணர் வலியுறுத்துகின்றனர். இக்கொள்கையின் விளைவாகச் சமணர்கள் புலால் உண்பதில்லை. சமயப் பற்றுள்ள சமணர்கள் இக்கொள்கையை மிகக் கடுமையான வகையில் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஒரு ஈயைக்கூட கொள்வதில்லை; தற்செயலாக ஒரு பூச்சியை விழுங்கி அதைக் கொன்று விடுவோமா என அஞ்சி இருளில் உண்பதில்லை. செல்வமும் சமயப் பற்றுமுள்ள சமணர், தாம் தற்செயலாக ஒரு பூச்சியை அல்லது புழுவை மிதித்துக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக தாம் நடந்து செல்லும் போது தமக்குமுன் தெருவைப் பெருக்குவதற்காக ஒருவரை வேலைக்கமர்த்திக் கொள்வார்.

இதிலிருந்து சமயப்பற்றுள்ள ஒரு சமணர் நிலத்தை உழக்கூடாதெனப் புலனாகின்றது. சமணர்கள் உண்மையில் பயிர்த்தொழிலில் ஈடுபடுவதில்லை. அதுபோலவே கையால் செய்யும் தொழில்கள் பலவற்றை சமண சமயம் விளக்குகிறது. சமயக் கோட்பாடுகள் ஒரு சமுதாயம் முழுவதன் வாழ்க்கை முறைகளை எவ்வாறு மதிக்கக்கூடுமென்பதற்கு சமண சமயம் ஓர் அரிய எடுத்துக்காட்டு. சமணர்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டில் வாழ்ந்தபோதிலும், அவர்களுள் பெரும்பாலோர் பல நூற்றாண்டுகளாக வாணிகம், நிதி ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். சமண சமய நோக்கின் காரணமாக அவர்கள் தொழிலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர். இதன் விளைவாக சமணர்கள் செல்வர்களாக இருக்கின்றனர். மிகப் பெரிய அளவில் இந்தியாவின் அறிவு, கலை சார்ந்த நடவடிக்கைகளில் பங்கு பெற்றுள்ளனர்.

தொடக்கத்தில் சமண சமயத்தவரிடையே சாதி முறை இருந்ததில்லை. ஆயினும் இடையறாத இந்து சமயத் தொடர்பின் காரணமாக, சமணர்களிடையேயும் சாதி முறை வளர்ந்தது. ஆயினும், அஃது இந்துக்களிடையேயும் இருந்தது போல் அவ்வளவு கடுமையாக இல்லை. மகா வீரர் கடவுளைப் பற்றியோ, கடவுளர்களைப் பற்றியோ ஒரு போதும் பேசியதேயில்லை. ஆனால், இந்து வழிபாடு ஓரளவு தோன்றியுள்ளது. மகா வீரர் தம் கொள்கைகளை எழுதி வைக்கவில்லையாதலால், இந்துசமயக் கோட்பாடுகள் சில சமண சமயத்தில் கலந்து விட்டது தவிர்க்க முடியாதது எனலாம். அதுபோல சமண சமயமும் ஓரளவு இந்துச் சமயத்தைப் பாதித்துள்ளது. உயிர்களைப் பலி கொடுத்ததையும், புலால் உண்பதையும் சமணர்கள் எதிர்த்ததினால், இந்து சமய நடைமுறையில் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்பட்டன. மேலும், சமண சமயத்தில் இன்னா செய்யாமைக் கொள்கை இன்றுவரை இந்திய நாட்டில் சிந்தனையைப் பெரிதும் பாதித்து வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, சமண தத்துவஞானி அருள்மிகு இராஜசந்திரனின் (1867 – 1900) போதனைகள் காந்தியைப் பெரிதும் கவர்ந்தன. காந்தி அவரைத் தம் குருக்களில் ஒருவராகக் கருதினார்.

சமணர்களின் தொகை என்றுமே மிகுதியாக இருந்ததில்லை. இன்று இந்தியாவில் அவர்களின் மொத்த தொகை 26,00,000. உலக மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதியாகாது. ஆயினும் 2,500 ஆண்டுகளாக நிலைத்துள்ள ஒரு சமயத்தில் இது பெருந்தொகையாக இருக்கலாம். மகா வீரரின் முக்கியத்துவத்தைக் கருதிப் பார்க்கும் போது, சமண சமயம் சமணர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில், தொடர்ச்சியாக விளைவுகளை ஏற்படுத்து வந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s