அட்டாங்க யோகங்கள்

 
இயமம்
– கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை (பிறர் பொருள் விரும்பாமை) புலன் அடக்கம் என்பனவாம்.


நியமம் – தவம், மனத்தூய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.


ஆதனம் – பத்திரம், கோமுகம், பங்கயம் , கேசரி, சுவத்திகம் (மங்கலம்), சுகாதானம் (சுகமும்,திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறிருத்தல்), வீரம், மயூரம் முதலிய இருப்பினுள் ஒன்றாயிருத்தல்.


பிராணாயாமம் – பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல், இரேசக,பூரக கும்பங்களால் தடுத்தல் (இரேசகம் என்பது மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்பது வாயுவை உட்செலுத்துதல்). இதுவும் இரண்டு வகைப்படும்.1- அகற்பம் – மந்திரமில்லாது நிறுத்தல். 2- சகற்பம் – பிரணவத்துடன் காயத்திரி மந்திரத்தை, உச்சரித்து நிறுத்தல்.
பிராத்தியாகாரம் – மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.


தாரணை – உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்; இதற்கு ‘முழங்கால்,குதம், இதயம்,கண்டம்,கபாலம்’ என்னும் ஜந்து இடங்களிலும் ஜம்பூதங்களை (நிலம், நீர், தீ, காற்று, வானம்) ஆகியவைகளையும் ஒடுக்கி அவ்விடங்களில் முறையே பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் பஞ்ச மூர்த்திகளையும் இருத்திப்பாவித்தல் எனவும் கூறுவர்.


தியானம் – ஜம்புலத்தையும், அந்தக்கரணத்தையும் அடக்கி, ஒரு கரத்து மழுவும் ஒருகரத்துமானும் ஏந்தியதாய், அபயவரத அத்தங்களையுடையனவாய் சதுர்ப்புயம்,காளகண்டம்,திரிநேத்திரம் உடையனவாய் விளங்கும் சிவமூர்த்தியைத் தியானித்தலாம்.

சமாதி – ஓரிடத்தேனும் மந்திரத்தோடு நோக்காமல் எங்கணும் சிவவியாபகமாய், நோக்கி, அவ்வஸ்துவையும், தன்னையும் பிரிவறப் பொருத்துதல். இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.


அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

1. அணிமா – அணுவைக் காட்டிலும் சிறியதாக வடிவெடுத்தல்.
2. மகிமா – மலையை விட பெரிய வடிவெடுத்தல்.
3. கரிமா – மெல்லிய வடிவாக இருத்தலும், கைகளால் தூக்க இயலாத அளவிற்கு கனமாக இருத்தலும், நுகர்ச்சியின் தொடக்குகள் பற்றாமல் இருப்பதுவுமான ஆற்றல்.
 4. இலகிமா – காற்றை விட மெல்லிய வடிவெடுதல்.
5. பிராப்தி – நினைத்த பொருளை, நினைத்த நேரத்திலே பெரும் ஆற்றல்.
6. பிராகாமியம் – பல பல வடிவங்களை எடுத்தலுக்கும், அளவுக்கதிகமான வலிமை அல்லது ஆற்றல் உள்ளமைக்கும் இப்படி பெயர்.
7. ஈசாத்துவம் – தேவர்கள் முதல் சிறு உயிர்கள் வரை தன்னை வணங்கி வழிபடும் நிலை.
8. வசித்துவம் – தன்னை கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதும், கோள்களையும், மீன்களையும் தன் வசம் செய்வதுமான ஆற்றல். வசியம் என அனைவராலும் அறியப்பட்டுள்ளது. இதைவிட சிறந்த பல்வேறான சித்திகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கூடுவிட்டு கூடுபாயும் நிலை. சித்தர்கள் இந்த அட்டமா சித்திகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் சித்தர்களின் தனிப்பட்ட வாழ்கைகளைகளை விவரிக்கும் போது உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சித்தர்களின் மதம் –எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்ற மதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள் தெரிந்திருக்கின்றன.சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள். அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள். இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும் உண்டு.இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும் வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக நான்கு வழிகள்.
1. சாலோகம் – இறைவன்  இடத்தில் இருக்கும் நிலை. பூவுலகம் விட்டுப்போனபின் தேவர் உலகத்தில்  வாழ்வதை சாலோகம் என்பர்.
2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.கடவுளின் அருகே இருப்பதை சாமீபம் என்பார்கள். 
3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வதை சாரூபம் என்றும்; 
4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.கடவுளோடு இரண்டறக்கலந்து வாழ்வதை சாயுஜ்ஜியம் என்றும் சொல்வர்.

அடியா ரானீர் எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசேர் உடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே.  – யாத்திரைப் பத்து
பதப்பொருள் : அடியார் ஆனிர் எல்லீரும் – அடியாராகிய நீங்கள் எல்லீரும், விளையாட்டை – உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, அகல விடுமின் – நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்; கடிசேர் அடியே – மணம் தங்கிய திருவடியையே, வந்து அடைந்து – வந்து பொருந்தி, திருக்குறிப்பை – திருவுள்ளக் குறிப்பை, கடைக்கொண்டு இருமின் – உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; பொடி சேர் மேனி – திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, புயங்கன் – பாம்பணிந்த பெருமான், செடி சேர் உடலை – குற்றம் பொருந்திய உடம்பை, செல நீக்கி – போகும்படி நீக்கி, சிவலோகத்தே – சிவபுரத்தே, நமைவைப்பான் – நம்மை வைப்பான், தன் பூ ஆர் கழற்கே – தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, புகவிடும் – புகும்படி செய்வான்.
விளக்கம் : முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம். இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது.
                                                    
                           ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை. அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார். பாம்பாட்டி சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர். இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே.சித்தர்களினால் ஏற்பட்ட பலன் –சித்தர்களின் அறிவு திறத்தால் ரசவாதம், நாடிசோதிடம், பட்சி சாத்திரம், சித்த வைத்தியம், யோகா, தியானம் போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் போல சிலவற்றை அமைத்து சித்தர்கள் தங்களது துறையில் வல்லுனர்கள் ஆனார்கள் என்கின்றனர்.அது மட்டுமல்லாது உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள்,பட்டை வகைகள்,பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க காட்டிலும் குகையிலும் ஆராட்சி செய்ததால் மக்களுக்கு தெரியாத பல அரிய மூலிகைகளையும், முறைகளையும் சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

சதுரகிரி மலையில் வாழ்ந்த சித்தர் கூட்டம் பற்றி அகத்தியர் ஆயிரத்து இருநூறு என்ற நூல் கூறும் வரலாறு இங்கே எண்ணற்பாலது.
1. எக்கிய மா முனி என்பவர் அகத்தியருக்கு சிங்கி வித்தை கற்றுக்கொடுத்தார். அதனால் அகத்தியர் சிங்கி வித்தையில் குருமுடித்தார்.
2. சிங்கி வித்தை கருவூரார்க்கு உணர்த்தப்பட்டு அவர் சிங்கி வேதைமுடித்து போகத்தில் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார். 3. கொங்கணர் வீரம் என்கிற பாடாணத்தால் வேதை முடித்து சிவயோக நிட்டையில்பலகாலம் இருந்து மேருகிரியில் பூரணத்தில் நின்று ஒடுங்கினார்.
4. போகர் ஏமரசம் கண்டு அதனை உண்டு ஒரு கோடி காலம் சிவயோகம் இருந்துபூரணத்தில் தங்கினார்.
5. கயிலாசச் சட்டைமுனி சவுக்காரச் சுண்ணம் கண்டு வேதை பார்த்து கோடிகற்பகாலம் இருந்து சிவயோகியாய் சாலோக பதிவியை அடைந்தார்.
6. கமல முனி அண்டச்சத்து கண்டு மெழுகுபண்ணி வேதை பார்த்து மதியமிர்தமுண்டு மேருவில் தவம் பண்ணி சதகோடி யுகாந்தம் இருந்து கமலமலரில் சென்று பரவெளியில் கலந்தார்.

7. மச்ச முனி கெந்தியில் சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து சடம் அழியாமல் சிவயோகத்தில் இருந்து சிவமயமானார்.
8. திருமுலர் கௌரி சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து கோடான கோடி காலம் பூரணமாய் நிட்டை கூடி மணி மகுட முடியில் சென்று பூரணத்தில் அடங்கினார்.
9. நந்தீசர் அயக்காந்த சத்து எடுத்து வேதைபார்த்து செந்தூரித்து பூரணத்தில் நின்று வெகு கோடி யுகாந்த காலம் இருந்து சோதியில் கலந்தார்.
10. சுந்தரானந்தர் களி உப்பு வாங்கி நீற்றி சுண்ணாம்பாக்கி நவலோக வேதை பார்த்து தன்னிலை அறிந்து பொற்கமலம் மீதேறி அனந்தகாலம் தவம் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.
11. கோரக்கர் நவக்கிரக பூசை பண்ணி பூரணத்தில் சொக்கி கோடியுகம் நிட்டை கூடி கைலாயம் சென்று பூரணத்தில் இருந்து பரமபதம் அடைந்தார்.
12. காலாங்கி
13. புண்ணாக்கீசர்
14. வியாக்ரபாதர்
15. கூனக் கண்ணர்
16. சிவவாக்கியர்
17. இடைக்காடர்
18. சண்டிகேசர் ஆகியோர்
வாசியோகம் செய்து மௌனமாகி சோதியில் ஏழு பேரும் சிவபூசை செய்து மௌனமாகி சோதியில் கலந்தார்.  இதனால் பதினெண்சித்தர்கள் யாவர் என்பதும் அவர்கள் நவபாடாணங்களை வேதை செய்து குரு முடித்து காயகல்பம் உண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்து சோதியில் கலந்தார்.

Copy from:http://angelinmery.weebly.com/

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s