போன உயிரை வரவழைக்கும் யோக சக்தி

இதுவரை சுவாமி விசுத்தானந்தர் குறித்த அறிய தகவல்களை கடந்த வாரம் பார்த்தோம். அவரை பால் ப்ரண்டன் என்ற வெளிநாட்டுப பயணி பல்வேறு கேள்விகள் கேட்டு தனது சந்தேகத்தைத தெளிவு படுத்தினார். அப்போது சூரிய ஒளி மூலம் தான் அதிசய சக்தியை பெறுவதாக விசுத்தானந்தர் கூறினார். அந்த அதிசய சக்தியை அடுத்த நாள் நிரூபிப்பதாக தெரிவித்தார். இனி…

மறுநாள் மதியம் பால் ப்ரண்டன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விசுத்தானந்தரைப் பார்க்கச் சென்றார்.

விசுத்தானந்தர் பால் ப்ரண்டன் முன்பே ஒரு குருவியை கழுத்தை நெறித்துக் கொன்றார். அந்தக் குருவி சுமார் ஒரு மணி நேரம் தரையில் உயிரற்றுக் கிடந்தது. அதை உயிர்ப்பிக்கிறேன் என்று விசுத்தானந்தர் சொன்ன போது பால் ப்ரண்டனால் நம்ப முடியவில்லை.

போன உயிரை மீண்டும் வரவழைப்பதா? அது யாருக்கானாலும் சாத்தியமா? பெருத்த சந்தேகத்துடன் அவர் விசுத்தானந்தரின் செய்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

விசுத்தானந்தர் ஒரு பூதக்கண்ணாடியின் மூலம் சூரியக் கதிர்களை இறந்து போயிருந்த குருவியின் ஒரு கண்ணின் மீது குவிக்க ஆரம்பித்தார். விசுத்தானந்தர் முகத்தில் சலனமே இல்லை.

மிகவும் கவனமாக அந்தக் குருவியையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் குருவியின் உடலில் எந்த மாற்றமும் இல்லை.

திடீரென்று விசுத்தானந்தர் விசித்திரமாய் ஓரு வித கூக்குரல் எழுப்பி விட்டு பால் ப்ரண்டனுக்கு புரியாத ஏதோ ஒரு மொழியில் மந்திரங்கள் உக்சரிப்பது போல் சொல்ல ஆரம்பித்தார்.

மிகவும் ஆச்சரியகரமாய் குருவியின் உடல் துடிக்க ஆரம்பித்தது. வலிப்பு வந்து துடிப்பது போலத்தான் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனால் குருவி அதில் இருந்து சீக்கிரமே மீண்டும் தரையில் காலூன்றி நின்றது. பின் அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் பறக்க ஆரம்பித்தது.

பால் ப்ரண்டனுக்கு நடப்பதெல்லாம் நிஜமா இல்லை கண்கட்டு வித்தையா என்று சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் சந்தேகப்பட ஒன்றுமில்லை. அந்தக் குருவி அவர் கண் முன்னாலேயே சாதாரணமாகப் பறந்து கொண்டு தான் இருந்தது. அடுத்த அரை மணி நேரம் அப்படிப் பறந்த குருவி திடீரென்று உயிர் இழந்து கீழே விழுந்தது.

பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பால் ப்ரண்டன் விசுத்தானந்தரைக் கேட்டார். ‘இந்தக் குருவியை இன்னும் சிறிது நேரம் உயிர்பிழைக்க வைக்க முடியாதா?’

விசுத்தானந்தர் ‘இப்போதைக்கு இவ்வளவு தான் செய்ய முடியும்’ என்று சொல்லி விட்டார்.

விசுத்தானந்தரின் மற்ற சக்திகள் பற்றியும் மற்றவர்கள் மூலம் பால் ப்ரண்டன் கேள்விப்பட்டிருந்தார். அந்தரத்தில் இருந்து திராட்சைகளை வரவழைப்பார், வாடிய மலரை அப்போது தான் பூத்தது போல காட்சியளிக்கச் செய்வார் என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள்.

‘இந்த அற்புதங்களை எல்லாம் எப்படி நிகழ்த்துகிறீர்கள்?’ என்று பால் ப்ரண்டன் ஆவலுடன் விசுத்தானந்தரிடம் கேட்டார்.

‘சூரிய விஞ்ஞானம் பயன்படுத்தி தான் இதைச் செய்கிறேன்’ என்று விசுத்தாந்தர் பதிலளித்தார்.

அவருடைய திபெத்திய குருவுக்கு ஆயிரம் மேல் வயதிருக்கும் என்றும் அவரிடமிருந்து இந்த விஞ்ஞான ரகசியங்களைக் கற்றுக் கொண்டதாகவும் விசுத்தானந்தர் கூறினார்.

பால் ப்ரண்டன் ‘சூரிய விஞ்ஞானம் என்பதும் ஒருவித யோகக் கலையா?’ என்று கேட்டார்.

‘யோகக்கலைக்கு மன உறுதியும், மனக்குவிப்பும் அவசியம். ஆனால் ‘சூரிய விஞ்ஞானம்’ கற்க அதெல்லாம் தேவையில்லை. உங்கள் மேலை நாட்டுக் கல்வி போல இதைக் கற்கலாம்.இது பல சூட்சும ரகசியங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுத்துவது. அவ்வளவு தான்.’ என்று விசுத்தானந்தர் சொன்னார். ஆனால் அது சுலபமானது தானா? என்று அவர் தெரிவிக்கவில்லை. கூடவே என் ‘திபெத்திய குருநாதரின் அனுமதி இல்லாமல் இதை உங்களுக்குக் கற்றுத் தர முடியாது’ என்பதையும் அவர் தெரிவித்தார்.

‘உங்கள் குரு திபெத்தில் இருக்கிறார். நீங்களோ இந்தியாவில் இங்கு இருக்கிறீர்கள். எப்படி அவரிடம் அனுமதி வாங்க முடியும்?’ பால் ப்ரண்டன் கேட்டார்.

‘மனவெளிகளில் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்’ என்றார் விசுத்தானந்தர்.

பால் ப்ரண்டனுக்கும் யோகானந்தரைப் போலவே இந்த வித்தைகளைக் கற்பதில் ஆர்வம் இருக்க வில்லை. அவர் தன் இலக்கான ‘மெய்ஞான சித்தியை அடைவது எப்படி? என்று விசுத்தானந்தரைக் கேட்டார்.

‘யோகம் கற்காமல் மெய்ஞானம் அடைய முடியாது’ என்றார் விசுத்தானந்தர்.

அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை இருக்கும் பிரச்சனையை பால் ப்ரண்டன் விசுத்தானந்தரிடம் தெரிவித்தார்.

‘யோகக்கலையை புரிந்து கொள்ளக் கூட குரு அவசியம் என்கிறார்கள். அப்படி இருக்கையில் அதை கற்பதும் பின்பற்றுவதும் குருவின் துணை இல்லாமல் நடக்காது அல்லவா? இப்போதோ உண்மையான குரு கிடைப்பதே அரிதாக இருக்கிறது’.

‘சீடன் தயார் நிலையில் இருந்தால் குரு தானாக புலப்படுவார். எனவே மனிதன் தன்னை தயார் படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி முழு மனதுடன் முயன்றால் கண்டிப்பாக குரு அவனுக்குக் கிடைப்பார். ஒருவேளை குரு புறக்கண்ணுக்கு தெரியாவிட்டால் கூட அகக் கண்ணுக்குப் புலப்படுவார்’ என்ற விசுத்தானந்தர் தொடர்ந்து மெய்ஞானம் பெறத் தேவையானவற்றை பால் ப்ரண்டனுக்கு உபதேசித்தார்.

அவரை விட்டுப் பிரியும் போது கூட அவர் செய்து காட்டிய அற்புதங்கள் ஏற்படுத்திய பிரமிப்பு பால் ப்ரண்டனை விட்டு அகலவில்லை.

அடுத்த அனுபவம் ரிஷி சிங் க்ரேவால் என்பவருடையது. இவர் பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் , யோக வாசிஷ்டம் போன்ற நூல்களோடு இமயமலையில் வாழும் யோகிகள் பற்றியும் எழுதியவர். இவர் அமெரிக்காவில் வசித்தவர். இவர் எழுதிய இந்தப் புத்தகங்கள் அமெரிக்காவில் பிரசுரமானவை.

ரிஷி சிங் க்ரேவால் யோகி விசுத்தானந்தரை முதலில் சந்தித்தது 1900 ஆம் ஆண்டு. யோகானந்தர் மற்றும் பால் ப்ரண்டன் போல் அல்லாமல் இவர் யோகி விசுத்தானந்தருடன் நிறைய பயணம் செய்தவர்.

ஒரு சமயம் ரிஷி சிங் க்ரேவால் இமயமலையில் விசுத்தானந்தருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது உணவு கிடைக்காமல் நிறையவே கஷ்டப்பட்டார். விசுத்தானந்தர் யோகியானதால் சிறிதும் சிரமம் இல்லாமல் பயணம் செய்தார்.

ரிஷி சிங் க்ரேவால் விசுத்தானந்தரிடம் ‘பணம் இருந்தால் இங்கே மலைக்கிராம மக்களிடம் உணவுப்பொருள் ஏதாவது வாங்கியாவது உண்ணலாம்’ என்றார்.

விசுத்தானந்தர் ‘உனக்கு வெள்ளி தந்தால் போதுமா?’ என்று கேட்டார்.

ரிஷி சிங் க்ரேவால் ‘தாராளமாக’ என்றார்.

உடனடியாக விசுத்தானந்தர் அந்தரங்கத்தில் இருந்து வெள்ளிக்கட்டி வரவழைத்துத் தந்தார். அந்த வெள்ளிக்கட்டி பெரியதாக இருந்தது.

ரிஷி சிங் க்ரேவாலுக்கு அந்த விலை உயர்ந்த வெள்ளிக்கட்டியை வெறும் உணவுப் பொருளுக்காகச் செலவு செய்ய மனம் வரவில்லை. அதை ஒரு கயிறில் கட்டிக்கொண்டு நீண்ட நாட்கள் தன் தோளில் போட்டு சுமந்து கொண்டு நடந்தார்.

மனித மனத்தின் விசித்திரங்கள் தான் எத்தனை? சில மாதங்கள் கழித்து அந்த வெள்ளிக்கட்டியை எடுத்துக் கொண்டு போய் அதை விற்க முயன்றார். அந்த வியாபாரி அந்த வெள்ளிக்கட்டியை பரிசோதித்து வாங்க ஒத்துக்கொள்ளும் போது வரை ரிஷி சிங் க்ரேவாலுக்கு சந்தேகம் லேசாக இருந்தது. நல்ல விலை கொடுத்து அந்த வியாபாரி வாங்கிக் கொண்டார்.

அதன் பின் விசுத்தானந்தர் செய்த எத்தனையோ அற்புதங்களை ரிஷி சிங் க்ரேவால் தன் கண்ணாரக் கண்டார்.

இமயமலையில் நடக்கையில் எவ்வளவு பனியிலும் இயற்கைத் தாவரங்களிலும் குகைகள் மறைந்திருந்தாலும் துல்லியமாக அங்கே தங்குவதற்கு எங்கு குகை இருக்கிறது என்று விசுத்தானந்தர் கண்டுபிடித்து விடுவார்.

அதேபோல் அந்தரத்தில் இருந்து உணவு, உடைகள், பொருட்கள் வரவழைப்பதிலும் அவர் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார்.

ஒருமுறை ரிஷி சிங் க்ரேவால் விசுத்தானந்தரிடம் கேட்டார். ‘கரன்சி நோட்டுக்களை நீங்கள் வரவழைப்பீர்களா?’ என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s