மகா சக்தி மனிதர்கள்

யோகி விசுத்தானந்தர், 1937 வரை இவ்வுலகில் வாழ்ந்தவர். இவரைப் பற்றியும் இவரது சக்திகளைப் பற்றியும் நேரடி அனுபவங்களாக சிலர் எழுதி இருக்கிறார்கள்.

அவர்களில் மிக முக்கியமானவர்கள் பரம ஹம்ச யோகானந்தர், ரிஷி சிங் க்ரேவால் மற்றும் இங்கிலாந்து தத்துவஞானி பால் ப்ரண்டன்.

yogi-visuththaananhtharயோகி விசுத்தானந்தர் வங்காளத்தில் பிறந்தவர். பதிமூன்று வயது வரை ஒரு சராசரி சிறுவனாக வளர்ந்தவர். பதிமூன்றாம் வயதில் ஒரு விஷ ஜந்துவால் கடிக்கப்பட்ட அவரை மருந்தால் குணப்படுத்த முடியவில்லை.

கிட்டதட்ட இறந்தே போய்விட்ட மகனைக் கங்கையில் புதைக்க பெரும் துக்கத்துடன் அவருடைய தாய் கொண்டு வந்தார். அப்போது கங்கைக் கரையில் இருந்த ஒரு யோகி விசுத்தானந்தரின் விஷக்கடிக்கு சில பச்சிலைகளைத் தடவி ‘ சிறுவன் குணம் அடைவான். எதிர்காலத்தில் பெரிய யோகியாவான்.’ என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அந்த யோகி சொன்னது போலவே விசுத்தானந்தர் ஒரு வாரத்தில் முழுமையாகக் குணம் அடைந்தார். அதன் பின்னர் அவர் இயல்பிலும் பெரிய மாற்றம் தென்பட ஆரம்பித்தது.

வழக்கமான விளையாட்டுக்களிலும் கல்வியிலும் நாட்டம் குறைந்து ஆன்மீக மார்க்கத்திலும், யோகிகள் மீதும் விசுத்தானந்தருக்கு நாட்டம் ஏற்பட ஆரம்பித்தது.  மகனின் மாற்றத்தைக் கண்டு வருந்தினாலும் அவர் தாய் சில வருடங்கள் கழித்து மகன் வீட்டை விட்டு செல்ல அனுமதித்தார்.

யோகிகளையும், யோகசக்திகளையும் நாடி விசுத்தானந்தர் பயணமானார். இமயமலையின் சில பகுதிகளில் கடுமையான சில சீதோஷ்ண நிலைகளிலும் பயணித்து கடைசியில் திபெத்திய யோகி ஒருவரைத் தன் குருவாகக் கண்டார்.

3aஅந்த திபெத்திய யோகியிடம் பன்னிரெண்டு ஆண்டு காலம் இருந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு விசுத்தானந்தர் பல யோக சித்திகளைக் கற்றுக் கொண்டார்.

பரம ஹம்ச யோகானந்தர் தன் இளம் வயதில் கொல்கத்தாவில் யோகி விசுத்தானந்தரை சந்தித்தார். அந்தப் பகுதியில் யோகி விசுத்தானந்தரை கந்தா பாபா (நறுமண சுவாமிகள்) என்றழைத்தார்கள்.

எந்த நறுமணத்தை வேண்டினாலும், வேண்டியபடி அந்த நறுமணத்தை அதே இடத்தில் ஏற்படுத்துவதில் யோகி விசுத்தானந்தர் வல்லவராக இருந்ததால் அவர் அப்படி அழைக்கப்பட்டார்.

அவரிடம் வருபவர்கள் எல்லாம் ஏதோ ஒரு மலரின் நறுமணத்தை அவர் மூலம் எதிர்பார்ப்பவர்கள் என்பதால் யோகானந்தரைப் பார்த்தவுடன் விசுத்தானந்தர் ‘என்ன மணம் வேண்டும்?’ என்று கேட்டார்.

யோகானந்தர் அதற்கு உடனடியாகப் பதில் சொல்லாமல் ‘இந்த சக்தியை அடைய எத்தனை காலம் கற்றீர்கள்?’ என்று கேட்டார்.

விசுத்தானந்தர் ’12 வருடங்கள்’ என்று கூறவே, யோகானந்தர் தன் இளமைக்கே உரித்தான குறும்போடு ‘ இது போன்ற நறுமணங்களை ஏற்படுத்துவதால் என்ன பெரிய பலன்? காசு தந்தால் எதையுமே கடையில் வாங்கலாமே. இதற்குப் போய் 12 வருடங்களை வீணடித்திருக்கிறீர்களே’ என்று சொல்லி இருக்கிறார்.

அந்தக் கேள்வியால் கோபம் அடையாத விசுத்தானந்தர் யோகானந்தரைப் பாராட்டி ஆசீர்வதித்தார். பின் யோகானந்தரைக் கையை நீட்டச் சொன்னார். யோகானந்தர் கையை நீட்டினார்.

விசுத்தானந்தர் ‘என்ன மணம் வேண்டும்?’ என்று கேட்க யோகானந்தர் ‘ரோஜா’ என்று சொன்னார். அவர் கையைத் தொடாமலேயே விசுத்தானந்தர் ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்ல யோகானந்தரின் உள்ளங்கையில் இருந்து ரோஜா மணம் மிக இனிமையாகப் பரவியது.

யோகானந்தர் அருகில் இருந்த பூச்செடியில் இருந்து ஒரு வாசனையற்ற பெரிய வெள்ளைப் பூவை எடுத்து ‘இதில் இருந்து மல்லிகை மணம் வரவழைக்க முடியுமா?’ என்று கேட்க அதற்கும் விசுத்தானந்தர் அப்படியே ஆகட்டும் என்று சொல்ல ஆச்சரியகரமாய் அந்த வாசனையில்லா மலரில் இருந்து மல்லிகையின் மணம் வர ஆரம்பித்தது.

வீடு திரும்பியதும் யோகானந்தரின் இளைய சகோதரி ‘நீ செண்ட் அல்லாம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டாயா? ரோஜா வாசம் பலமாக அடிக்கிறது’ என்று சொன்னாள். இன்னமும் அந்த மணம் போகவில்லை என்பதை புரிந்து கொண்ட யோகானந்தர் தன் கையில் இருந்த வெள்ளை மலரை அவளிடம் தந்தார்.

‘எனக்குப் பிடித்த மல்லிகை மணம்’ என்று அந்த மலரை வாங்கிய அவர் சகோதரி அந்த மணமில்லாத பூவில் எப்படி மல்லிகை மணம் வீசுகிறது என்று குழம்பினாள். சிறிது நேரம் கழித்தும் கூட அந்த மணங்கள் அப்படியே தங்கி இருப்பது யோகானந்தருக்கும் வியப்பாய் தான் இருந்தது.

சிறிது காலம் கழித்து யோகானந்தர் அலகா நந்தா என்ற ஒரு நண்பரிடம் இருந்து விசுத்தானந்தர் பற்றி இன்னொரு ஆச்சரியகரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டார்.

அவர் நண்பர் அலகா நந்தா தன் நேரடி அனுபவத்தை இப்படிச் சொன்னார். ‘நான் கந்தா பாபாவின் பர்த்வான் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு சுமார் நூறு பேராவது இருந்திருப்பார்கள். வீடே விழாக்கோலத்தில் இருந்தது. எல்லோருக்கும் உணவு வாழை இலையில் பரிமாறினார்கள்.

கந்தா பாபாவுக்கு வெட்ட வெளியில் இருந்து பொருள்களைத் தருவிக்கும் சக்தியும் உண்டு என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் ‘இந்த சீசனில் விளையாத ஏதாவது வித்தியாசமான பழங்களைத் தருவித்துத் தாருங்கள் பாபா’ என்று நான் விளையாட்டாகச் சொன்னேன்.

உடனடியாக அத்தனை பேர் இலைகளிலும் ஒரு வகை ஆரஞ்சுப்பழம் உரித்து வைக்கப்பட்டிருந்தது. நம்ப முடியாமல் அதை எடுத்து ருசித்துப் பார்த்தேன். அது உண்மையான பழம் தான். ருசியும் நன்றாக இருந்தது’.

நறுமணங்களை உருவாக்க மட்டுமே விசுத்தானந்தர் கற்று வைத்திருந்தார் என்று குறைத்து மதிப்பிட்டது தவறு அதன்பின் யோகானந்தர் உணர்ந்திருக்க வேண்டும்.

பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவஞானியும் தன் இந்தியப் பயணத்தின் போது வாரணாசியில் யோகி விசுத்தானந்தரைச் சந்தித்ததாக எழுதி உள்ளார். அந்த சந்திப்பில் அப்போது நடந்த சம்பவங்களும் சுவாரசியமானவை. பால் ப்ரண்டன் தங்கள் பேச்சை மொழி பெயர்ப்பு செய்ய கோபிநாத் கவிராஜ் என்ற அரசாங்க சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வரை அழைத்துச் சென்றிருந்தார்.

பால் ப்ரண்டனைச் சந்தித்த போது விசுத்தானந்தர் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பால் ப்ரண்டன் விரும்பிய நறுமணங்களை ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். யோகானந்தருக்கு நேரடியாக நறுமணத்தை ஏற்படுத்தி தந்தது போல் செய்ய வில்லை. பால் ப்ரண்டனிடம் இருந்து ஒரு பட்டுக் கைக்குட்டை வாங்கி அதில் சூரிய ஒளியை ஒரு கண்ணாடி மூலம் குவித்து பால் ப்ரண்டன் விரும்பிய மூன்று நறுமணங்களை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பால் ப்ரண்டனுக்கு விசுத்தானந்தர் மீது ஆரம்பத்தில் சந்தேகம் தான் வந்தது. பலவகை நறுமண புட்டிகளை ரகசியமாக மறத்து வைத்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்ட அவர் விசுத்தானந்தரின் செய்கைகளை மிகவும் கூர்மையாகக் கவனித்தார். அது போன்று ஏமாற்று வேலைகள் எதையும் விசுத்தானந்தர் செய்யவில்லை என்பது தெரிந்தது.

பால் ப்ரண்டன் அந்த கண்ணாடியையும் வாங்கி சோதித்துப் பார்த்தார். அந்தக் கண்ணாடியும் மிகவும் சாதாரணமாக தான் இருந்தது. பால் ப்ரண்டன் விசுத்தானந்தரின் மற்ற சக்திகளையும் காண விருப்பம் தெரிவித்த போது அதற்கு தற்போதைய சூரிய ஒளி போதாது என்றும் மறுநாள் மதியம் தன்னை வந்து சந்திக்கும்படியும் வியௌத்தானந்தர் தெரிவித்தார்.

தான் தங்கி இருந்த அறைக்குத் திரும்பி வந்த பிறகும் கைக்குட்டையில் இருந்த நறுமணங்கள் அப்போதும் இருக்கின்றனவா என்று பால் ப்ரண்டன் சோதித்துப் பார்த்தர். அப்படியே இருந்தது. அங்கு மூன்று நபர்களிடமும் அந்தக் கைக்குட்டையைக் கொடுத்து முகரச் சொல்லி சோதித்துப் பார்த்தார். அவர்களும் அந்த நறுமணங்களின் பெயர்களைச் சரியாகச் சொன்னார்கள்.

விசுத்தானந்தர் ஹிப்னாட்டிசம் செய்து பொய்யாக நம்ப வைக்கவில்லை என்பது உறுதியானது.

மூலம் : தினத்தந்தி

என். கணேசன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s