கர்மாவும் குறளும்

கர்மாவும் குறளும்

பலர் கர்மா என்ற சொல்லையோ அதன் விளக்கத்தையோ புரிந்து கொண்டிருந்தாலும், அன்றாட வாழ்வியலில் அதன் பொருளை உணர்வதில்லை.

தனக்கு மிகவும் நெருங்கிய உறவொன்றை இழந்த நண்பர் ஒருவர் கதறினார் – “எனக்கு மட்டும் இறைவன் ஏன் இப்படி செய்கிறான், நான் என்ன பாவம் செய்துவிட்டேன்…” என்று.

ஆக்கமும், நடத்தலும், நீக்கலும் அவன் செயல்தான் என்றாலும், ஒருவருடைய கர்மாவினை இறைவன் நிர்ணயிப்பதில்லை. ஒருவருக்கு உடலில் புற்று நோய் வந்து உடல் மெலிந்து போகவும், இன்னொருவர் திடகாத்திரமான உடல் கட்டுடன் விளையாட்டு வீரராக புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் எங்கிருந்தோ இறைவன் நிர்ணயிப்பதில்லை. எப்படி அவரவர் செய்யும் உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு அவர் உடற்கட்டு அமைகிறதோ, அதுபோல, உங்கள் ஆத்ம சக்தியினை எந்த அளவிற்கு நீங்கள் பயற்சியில் ஈடுபடுத்துகிறீர்களோ, அதற்கேற்றாற்போல் உங்கள் கர்மாவும் அமையும்.

இன்னமும் சொல்லப்போனால், கர்மாவே உங்களுக்கு ஒரு ஆசானாக ஆக்கிக் கொள்ள முடியும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம் கருமமே கட்டளைக்கல்லெனத் தெளிதலும், எக்கருமம் எந்த விளைவினை ஏற்படுத்தும் என்னும் அனுபவ அறிவும், இருந்தால், அதுவே அவரவர்க்கு கீதா உபதேசம்.

கர்மா என்பது தலைவிதி அல்ல. அது முன்பே நிர்ணயிக்கப்பட்டது அல்ல. மேலே இருந்து கொண்டு எந்த ஒரு கிரகமோ, நட்சத்திரமோ, ஏன் கடவுளே கூட, இந்தா, பிடி, உனக்கு இந்த கர்மா என்று வழங்குவதில்லை. நம் வாழ்வில் நடக்கும் எந்த சம்பவத்தையும் இறைவன் முன்பாகவே தீர்மானிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இறைவன் நமக்கு எந்த சோதனையும் கூட தருவதில்லை.

நம் கர்மாவினை நாமே தீர்மானிப்பதால், என்ன செய்தால் நல்ல கர்மா கிட்டும்? எவ்வாறு கர்மாவினை மேலாண்மை செய்யலாம்?. இதோ, உலகப்பொது மறையில் இருந்து பத்து மேலாண்மை முத்துக்கள்:

 1. பதிலடி கொடுக்கத் தேவையில்லை. பதிலடி கொடுப்பதால், புதிய கிளைக் கர்மா உருவாகிட வழி வகுக்கும். அகத்தாய்வு செய்யின், அதற்கு அவசியமே இல்லை என்பதறிவீர்.

மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். (303)

 1. நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளவும். தீமை விளையும் போது, அதற்கு காரணமானவரை பொறுப்பாக்குவது இயற்கை. ஆனால், நன்மையும் தீமையும் மற்றவரால் வருவதல்ல, அதற்கு அவர் ஒரு கருவி மட்டுமே உணரவும். ஏனெனில்,

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் (379)

3.மறப்போம், நன்மை செய்வோம். தனக்கு தீமை செய்தவரின் மேல் சினம் கொண்டால், அந்த சினத்தின் விளைவால், அடி மனது எப்போதும் கனன்று கொண்டே இருக்கும். ஆனால் அதை மறந்து, நன்மை செய்யும்போது, அதுவே நல்ல கர்மாவாக திரும்பும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314)

 1. விளைவுகளை யோசிக்கவும். இன்னொருவருக்கு துன்பம் விளைவித்தல் எளிது. அதன் விளைவு தனக்குத்தான் கர்மாவாக வந்து முடியும் என்ற அறிந்தவர், அதனாலாவது, மற்றவர்க்கு துன்பம் தராமல் இருப்பர்.

நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)

 1. தீவினை வேண்டாம். இன்னொருவரின் துன்பமும், தம் துன்பம் என்று கருதினால், தீவினைகளை தவிர்க்கலாம்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. (315)

 1. இறையருள் நாடவும். நீங்கள் தனிமரமாய் உங்கள் கர்மாவினை தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதில்ல. எல்லா வளமும் அருள காத்திருக்கிறான், எல்லாம் வல்லவன். அவன் அருளை நாடினால், ஏற்கனவே செய்த வல்வினைகளை தகர்த்திடும் மன உறுதியும், தூய செயல் ஆற்றலும் கிட்டும்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)

 1. ஏற்கனவே இருக்கும் கர்மாவை குறைக்க/தீர்க்க முயலவும். ஒருவர் அறவழிகளில் தொடர்ந்து நடந்து வந்தால், ஏற்கனவே செய்த தீவினைகளால் வரப்போகும் துன்பமும் குறைந்து விடும்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)

 1. அறவழியில் நடந்து நல்ல கர்மாவினை சேர்க்கவும். ஏனெனில்,

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)

 1. எந்த சமயத்திலும் யாரையும் இழிவு செய்ய வேண்டாம். ஏனெனில்,

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. (317)

 1. அகத்தேடல் எனும் அருந்தவத்தில் ஈடுபடவும்.
  அகம் ஒளிரும் நிலை பெற்றிட, உள்ளார்ந்து, உள் மனதில் இறைவனின் பிம்பத்தினை தேடுவர். அவர் நற்சிந்தனையுடன் செயல்பட்டு தமது கர்மா முழுதும் தீர்த்திட, பிறவிப் பெருங்கடலை கடந்திட அருள் பெறுவர்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (267)

மொத்தத்தில் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும்.

இதில் இறைவனின் பங்கென்ன என்று கேட்டால், இறைவனை வேண்டி நிற்பதனால், கர்மாவில் குறுகிட்டு அதை குறைப்பதிலோ, அல்லது தற்காலிகமாக தள்ளிப்போடவோ அவனால் இயலும். சரி, நல்ல கர்மாவையே ஒருவர் பெரிதும் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்றால், அவருக்கு இறைவனின் துணை தேவையில்லையா என்று கேட்கலாம். அப்படிப்பட்ட ஒருவருக்கு, இறைவன் இன்னொன்றாக இருக்காது. அவர் ஆன்மீகவாதியாக இருப்பாரென்றால் தான் நடக்கும் அவன் வழியே அற வழி என்பார். எங்கெங்கும் நிறைந்தவன் இறைவன் என்று எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பார் அவர். ஆன்மீகத் தேடலில் அடிஅடியாய் எடுத்து வைத்து, தம் ஆத்ம சக்தியினை வளர்த்துக் கொண்டவருக்கு, மொத்த கர்மாவும் எளிதில் தீர்ந்திடும். மறுபிறவி இல்லா நிலையும் வாய்க்கப் பெற்றிடும்.

ஜோதிடமும் கர்மாவினால் இப்படி நாம் நடக்கலாம் என்பதை, கோள் மற்றும் நட்சத்திர அமைப்புகளின் உதவியுடன் கணித்துச் சொல்வதுதான். “கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும், ஈசன் அவன் அருள் இருக்கையிலே?”.

மேற்கோள்:
1. கர்மா – குவை இந்து ஆதினம்
2. கர்மா – “இன்றைய இந்து” இதழ்
3. திருக்குறள் – Weaver’s wisdom

படித்ததில் பிடித்தது

திருச்சிற்றம்பலம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s