அருணகிரிநாதர்

அருணகிரிநாதர்

பிறப்பு

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையில் 15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவரது தந்தையார் பெயர் Arunagirinatharதிருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் அறியப்படுகிறது. இளமையிலேயே தாய் தந்தையாரை இழந்த அருணகிரிநாதரை, அவரது மூத்த சகோதரி ஆதியம்மை அவர்கள் தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் தம்பியை தன் மகனாகவே பாவித்து அன்போடு வளர்த்தார். அருணகிரிநாதர் இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இருப்பினும், மாயா நெறியில் அகப்பட்டு, பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இவரது தமக்கையார் அருணகிரிநாதர் நாளடைவில் திருந்துவார் என்று எண்ணி இவருக்கு மணமுடித்து வைத்தார். இருந்தும், அருணகிரிநாதர் பெண்ணாசை கொண்டு பரத்தையரின் பால் மனதை பறிகொடுத்து, தாசிகள் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால் சிறிது சிறிதாக தமது சொத்துக்களை இழந்து வந்தார். காமத்திலேயே மூழ்கி திளைத்ததன் பயனாக, அருணகிரிநாதருக்கு பெருநோய் ஏற்பட்டது. இவரது நடத்தையினால் அவரது மனைவியும் அவரை வெறுத்து நீங்கினார்.

ஞானம் பெறுதல்

தமது சொத்துக்கள் அனைத்தும் அழிந்த போதும், உடல் குஷ்ட நோயால் பெரும்பிணியுற்று வருந்திய போதும், அருணகிரிநாதரால் பெண்ணாசையை கட்டுப்படுத்த இயலவில்லை. பரத்தையின் பால் செல்ல தமது தமக்கையாரிடம் பொருள் கேட்டார். தமக்கையார் தன்னிடம் ஏதும் இல்லாத நிலையில், “உனது இச்சையை தீர்க்க ஒரு பெண் தானே வேண்டும். நானும் ஒரு பெண் தான், உனது இச்சையை என்னிடம் தீர்த்துக் கொள்” என வருத்தத்துடனும், கோபத்துடனும் கூறினார். தமக்கையார் கூறிய வார்த்தைகள், அவரது இதயத்தை தைத்தன. பெண்ணாசையால் தமது வாழ்க்கையை வீணடித்ததோடு, தமது குடும்ப மானமே பறிபோனதை எண்ணி பதைபதைத்தார். அக்கணமே வீட்டை விட்டு வெளியேறி, கால் போன போக்கில் சென்றார். அவரை வழியில் கண்ட முதியவர் ஒருவர், அவரது நிலையை அறிந்து, முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, ஆறேழுத்து மந்திரத்தை உபதேசித்து, முருகனை வழிபடுமாறு கூறிச் சென்றார். அவரது உபதேசத்தின்பேரில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார். ஆயினும், முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்த போது, தியானம் கை கூடவில்லை. உடல் பிணி ஒரு புறம், தமக்கை கூறிய கொடுஞ்சொல் மறுபுறம் என அவரது உள்ளம் குழப்பமடைகிறது. வாழ்கையே வெறுத்த நிலையில், தம் உயிரை விடுவதே ஒரே வழி என்று எண்ணி, திருவண்ணாமலை கோபுர உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரை கீழே விழாமல் தாங்கி பிடித்தார். அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார். மந்திர உபதேசம் பெற்ற அருணகிரிநாதர், தியானத்தில் அமர்ந்தார். தியான நிலையிலேயே 12 ஆண்டுகள் கழித்தார். இறை அருளால், அவரது பிணி நீங்கி வஜ்ர தேகம் பெற்றிருந்தார். முருகப்பெருமான் அவர் முன் காட்சி அளிக்க, தியான நிலையில் இருந்து விடுபட்டு மெய்சிலிர்க்க ஆறுமுகக்கடவுளை வணங்கி நின்றார். முருகப்பெருமான் தன்னுடைய வேலால் அருணகிரிநாதர் நாவில் எழுதி, திருப்புகழை பாடுமாறு பணித்தார். அருணகிரிநாதர் தயங்கி நிற்க, முருகக்கடவுளே “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்று அடியை எடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் மடை திறந்த வெள்ளம் போல், திருப்புகழை பாடினார். பின்னர், வயலூர் வருமாறு பணித்து மறைந்தருளினார்.

வயலூரை அடைந்த அருணகிரிநாதர், பொய்யாக் கணபதி சன்னதி முன், “கைத்தல நிறைகனி” என்ற திருப்புகழை பாடித் துதித்தார். பின்னர், அறுபடை வீடுகளையும் தரிசித்து, தலந்தோறும், திருப்புகழ் பாடினார். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் யாவும் கருத்தாழமும், சொல்லாழமும், இனிய சந்தமும் நிறைந்தது. இவ்வாறு, தலந்தோறும் சென்று வரும் வேளையில், திருச்செந்தூரில், முருகப்பெருமானின் நடனத்தை கண்டு களிப்புற்றார். சுவாமி மலையில், அவருடைய தமக்கை ஆதியம்மையாரை சந்திக்க நேர்ந்தது. ஆதியம்மையார் அருணகிரிநாதரை வணங்கி, தம்மை முருகனடி சேர்க்குமாறு வேண்டினார். அருணகிரிநாதரும், முருகனை துதித்து பாடினார். முருகப்பெருமான் காட்சி அளித்து, ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கி மறைந்தார். பின்னர், விராலி மலையில் காட்சி அளித்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அட்டமாசித்திகளை அளித்து அருள் புரிந்தார்.

கருணைக்கு அருணகிரி

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர். அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார். வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால், “கருணைக்கு அருணகிரி” என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, “வில்லிபாரதம்” என்ற பெயரில் தமிழில் எழுதினார்.

இந்த பாடலின் பொருளை திருமுருக கிருபானந்த வாரியார் பின்வருமாறு விளக்குகிறார்.

திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

முருகன் தரிசனம்

பின்னர், பல திருத்தலங்களை தரிசித்து, தெவிட்டாத திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலை திரும்பினார். அருணகிரிநாதரின் புகழை அறிந்த திருவண்ணாமலையை ஆண்டு வந்த விஜயநகர குறுநில மன்னன் பிரபுடதேவராயன், அருணகிரிநாதரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றான். தேவி உபாசகர் சம்பந்தாண்டான் என்பவன் அருணகிரிநாதரின்பால் பொறாமை கொண்டான். இவன் மன்னன் பிரபுடதேவராயனின் ஆஸ்தான பண்டிதனாவான். அருணகிரிநாதரை கொல்ல காளி பூஜை செய்து, அருணகிரிநாதரின் பால் காளியை ஏவினான். காளிதேவி அன்றிரவே அருணகிரிநாதர் உறங்கும் வேளையில் அவரை கொல்ல நெருங்கினாள். அப்போது, பால முருகனாக தோன்றிய முருகப்பெருமான் காளி தேவியை “அம்மா” என்றழைக்க, காளி தேவி தன்னை மறந்து குழந்தையான முருகப்பெருமானை அழைத்துக் கொண்டு, கயிலை சென்றாள். இதனை அறிந்து ஆத்திரமுற்ற சம்பந்தாண்டான், அருணகிரிநாதரை சபைக்கு அழைத்து, அங்கிருந்தோரின் முன், தாம் வழிபடும் காளி தேவியை அனைவரின் முன் வரவழைத்துக் காட்டுவதாகவும், அவ்வாறே அருணகிரிநாதர் முருகப்பெருமானை வரவழைத்துக் காட்ட வேண்டுமெனவும், தவறினால், அவ்வூரை விட்டு நீங்க வேண்டும் எனவும் சபதமிட்டான். அருணகிரிநாதரும் அதற்கு ஒப்புக்கொண்டார். மறுநாள், அந்நிகழ்ச்சி நடக்க இருப்பதாக ஊர் மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. அன்றிரவே, காளி பூஜை செய்த சம்பந்தாண்டான் முன் காளிதேவி தோன்றினாள். சம்பந்தாண்டான், நாளை அனைவரின் முன் காட்சி அளிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக் கொண்டான். ஆனால், காளி தேவி அதற்கு இணங்கவில்லை. எனினும், சம்பந்தாண்டான் முருகப்பெருமானை நாளை அருணகிரி அழைக்கும் போது, வரவிடாமல் தடுத்து நிறுத்துமாறு பணிந்து கேட்டு கொண்டான். இதற்கு, ஒப்புக் கொண்ட காளி தேவி மறைந்தார். மறுநாள், மன்னன் உட்பட மக்கள் அனைவரும் திருவண்ணாமலை திருக்கோவிலில் திரண்டனர். அருணகிரிநாதர் இனிய தமிழில் திருப்புகழ் பாடி முருகனை அழைத்தார். ஆனால், காளி தேவி, பால முருகனை தன் மடியில் இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள். இதனால், முருகப்பெருமான் அருணகிரிநாதர் அழைத்தும் அவர் முன் தோன்ற இயலவில்லை. இதனை ஞானத்தால் உணர்ந்த அருணகிரிநாதர், தேவியை போற்றி பாட ஆரம்பித்தார். இவரது பாடலை கேட்டு தேவி முன் இருந்த மயில் நடனமாடியது. திருப்புகழின் இனிமையில் தன்னை மறந்த தேவி, முருகப்பெருமானை தன் பிடியிலிருந்து விட்டு விட்டாள். முருகப்பெருமானும், தேவியின் மடியிலிருந்து இறங்கி, மயிலேறி அங்கிருந்து நீங்கி, பதினாறு கால் மண்டபத்தில் அனைவரின் முன் தரிசனம் அளித்தார். அதனை கண்ட மன்னனும், மக்களும் மெய்மறந்து முருகப்பெருமானை வீழ்ந்து வணங்கினர். அருணகிரிநாதரும் “முருகனது கருணையை எண்ணி அவரை வீழ்ந்து வணங்கினார். இதன் மூலம், அருணகிரிநாதரின் புகழ் மேலும் பரவியது. அவமானம் அடைந்த சம்பந்தாண்டான் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

முக்தி அடைதல்

சில காலம் கழித்து, அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை பாதிப்படைந்தது. அருணகிரிநாதரை வஞ்சம் தீர்க்க சமயம் பார்த்திருந்த சம்பந்தாண்டான், மன்னனிடம், சொர்க்க லோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம் என்றும், பாரிஜாத மலரை இறையருள் பெற்ற அருணகிரிநாதரை அன்றி வேறு எவராலும் கொண்டு வர இயலாது எனவும் கூறினான். மன்னனும், அருணகிரிநாதரிடம் சென்று, தமக்கு மீண்டும் பார்வை கிடைக்க சொர்க்க லோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வர வேண்டும் என வேண்டினான். Kili Gopuramஅருணகிரிநாதரும் அவ்வாறே செய்வதாக மன்னனிடம் உறுதி கூறினார். சம்பந்தாண்டான் தன்னுடைய சகாக்களை அழைத்து, மானிட உருவில் சொர்க்க லோகம் செல்ல இயலாது என்றும், அட்டமா சித்திகளை பெற்ற அருணகிரிநாதர், கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உருவில் சொர்க்க லோகம் செல்வார் என்றும், அவ்வாறு செல்லும் வேளையில், அவரது உயிரற்ற உடலை தம்மிடம் கொண்டு வருமாரும் கூறினான். அருணகிரிநாதர் சொர்க்க லோகம் செல்ல, திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள பேய்க்கோபுரத்தின் மேல்நிலைக்கு சென்று, தம்முடைய உடலிலிருந்து உயிரை பிரித்து, அங்கு இறந்திருந்த கிளியின் உடலில் தம்முடைய உயிரை செலுத்தி அங்கிருந்து சொர்க்க லோகம் நோக்கி சென்றார். அருணகிரிநாதரை பின் தொடர்ந்து வந்திருந்த சம்பந்தாண்டானின் சகாக்கள், அருணகிரிநாதரின் உடலை எடுத்துக் கொண்டு சம்பந்தாண்டானிடம் கொண்டு சேர்த்தனர். சம்பந்தாண்டான், மன்னனிடம் அருணகிரிநாதர் சொர்க்கம் செல்லும் முயற்சியில் இறந்து விட்டார் என்று நம்ப வைத்து, அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். கிளி வடிவில் சொர்க்கம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து பூலோகம் திரும்பிய அருணகிரிநாதர், தமது உடலை காணாது திகைத்தார். தமது உடல் அழிக்கப்பட்டு விட்டதை அறிந்து அருணகிரிநாதர், கிளி உருவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலரை சேர்பித்தார். முருகனை நினைத்து துதித்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதரிடம் “கவலை வேண்டாம். இந்த கிளி உருவிலேயே கவி பாடுமாறு” அருளினார். பாரிஜாத மலரால் பார்வை பெற்ற மன்னன், கிளி உருவில் வந்தது அருணகிரிநாதரே என்பதை உணர்ந்து போற்றினான். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் பாடிய பாடலே கந்தர் அனுபூதியாகும். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது.

பல்வேறு தரப்பினர் அருணகிரிநாதர் மேற்கூறிய நிலையில் முக்தி அடைந்தார் என்று கூறப்பட்டாலும், அருணகிரிநாதரின் அம்சமாக கருதப்படும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கூறுவதை நோக்க வேண்டும்.

இம்மண்ணுல்கினின்றும் விண்ணுலகிற்கு இம்மானுட உடலோடு செல்லல் கூடாதென்பதை முன்னிட்டுத் தாமேயொரு கிளியுருவத்தைக் கொண்டு விசும்பிற்றாவிப் பறந்து அவ்வுலகையடைந்து ஒரு கல்லையிற் சில கற்பக மலர்களையிட்டு வாயிற் கவ்விக் கொணர்ந்து மலர் மணம் நகர் முழுவதுங் கமழ அரசர்க்களித்து அவ்வுருவத்தை மாற்றித் தமது பழைய உருவத்தைக் காட்டி நின்றனர். இஃதவருக்கொரு விளையாட்டாயிருந்தது. இச்செய்திக்கு மாறாக, அவர் தம்முடலைக் கோபுரத்தின் மீது விழுந்துக் கிளியுடலுட் புகுந்து சென்றாரென்பதும் அவ்வாறு விடுத்த உடலும் சம்பந்தாண்டானுடைய தூண்டுதலான் எரிக்கப்பட்ட தென்பதுஞ், சுவாமிகளுடைய அருட்டகமைக்கும், ஆற்றலுக்கும் முரண்படுவனவாகவுள, அந்நாதர் குகப்பிரமத்தினதருளாற் சருவஞ்ஞத்துவம் சுவப்பிகாசத்துவம் முதலிய கலியாண குணங்களையடைந்த பெருந்தகையினரென்னு முண்மையாலும் இழிதகையுடை வாயு கும்பகயோகத்தைக் கண்டித்தொதுக்கிய அவர் அந்த யோகத்தாற் செய்ய வல்ல பரகாயப் பிரவேசஞ் செய்யத் துணியாரென்னு நிச்சயித்தாலும் ஸ்ரீமத் ஸ்கந்த மஹாபுராணமென்னும் முதல்வன் புராணத்துச் சம்பவகாண்டத்து 41ம் அத்தியாயத்தில், “உலகில் எம்மைச் சரணமடைந்தோர்க்கு அச்சம் யாது? இச்சகத்தே எம்மடியார்க்கு பகைஞர் யாவர்? பிணியுமுண்டோ? மனிதக் பதடியாயுள்ளவொருவன் அறிவீனத்தால் எம்மடியாரை பகைப்பானாயின் அவன் எம்மையே பகைத்தவனாவான். எமக்கபராதஞ் செய்தானது செய்கையை யாம் மன்னிப்போம். அந்தத் துராத்மாவின் செய்கையை ஒருபோதும் மன்னியோம். இந்திரனாலாதரிக்கப்படினும் அவனைக் கண்டனஞ் செய்து விடுவோம்.” எனவரு கட்டுரைகள் கந்தபிரானுடைய திருவாக்காயிருத்தலின் அப்பிரான் தம் மெய்யடியவனுடம்பிற்குப் பகைஞனழிவு புரியப் பார்த்திரானென்பதனால் முரண்படுவனவாகவுளவென்றும் இம்முடிவு பெரிதுங்கொளக் கிடக்கின்றது

ஆக அருணகிரிநாதர் உடல் சம்பந்தாண்டானால் அடக்கம் செய்யப்பட்டது என்பது தவறான வாதமாகும்.

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் பதினாறாயிரம் என அறியப்படுகிறது. ஆனால் இவ்வுலகிற்கு கிடைத்த பாடல்கள் 1307 ஆகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s