Archive | May 2015

மூல-நெற்றி-பிடரி-உச்சிகண்

மூலக்கண்

முதுகுத்தண்டிற்குக் கீழ் சிறுநீர்த் துவாத்திற்கும் மலத்துவாரத்திற்கும் இடையில் “மூலக்கண்” உள்ளது. மூலாதாரம், உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று இதைப் பலவிதமாகச் சொல்லலாம். இதில் அடங்கியிருக்கும் கருவின் நிலை ஒரு கூடையினால் மூடப்பட்ட விளக்கின் நிலையில் ஒத்து இருக்கிறது. இதை மேல் நோக்கிக் கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு காத்திருக்கிறது.

நெற்றிக்கண்

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும், மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து “நெருப்பாறு மயிர்ப்பாலம்” என்றும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் வழியாகக் குருவின் பரிச உணர்ச்சியிலும், நுட்ப விவேகத் திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு, அறிந்த ஞானாசிரியரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு, விந்தும், தன் ஞாபகமும் கலந்தால்தான் முடிகிறது.இந்தக்கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி [பிராணயாமம்] என்ற மூச்சுப் பயிற்சியாலும், மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது.

நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப் பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணர முடியும், பின் அதை அணுபோகத்தாலேயே அறிய முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகிறோமென்று அவர்களுக்கு தெரியாமலேயே ‘சலாம்’ என்றும், ‘வந்தனம்’ என்றும், ‘நமஸ்காரம்’ என்றும், ‘கும்பிடுகின்றேன்’ என்றும் சொல்லியும் தங்கள், தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும், தங்கள் தங்கள் கையையும், சைகைகளையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத் தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமும், கோபமும், ஏற்படும் போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.

ஒரு மனிதனிற்கு உடம்பில் சூடு இல்லாமற் போனால் முன் சொன்னபடி நெற்றிக்கண்ணை ஞாபகத்தில் நினைத்தால் சூட்டை உற்பத்தி செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகித் தீருவான் என்பது திண்ணம். ஆகையால் தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.

நெற்றிக்கண் பயன்கள்:

பாலகனாயிருக்கும் போது பக்தியைத் தேடவும், வாலிப காலத்தில் யோகத்தில் ஈடுபடவும், வாலிபங்கடந்து முதியவராகும் போது நாஸ்திக ஞான அறிவு விளக்கம் பெறவும், மனிதன் ம்யற்சிக்க வேண்டும். எட்டாதே என்று ஒரு ஏமாளி சொல்வானானால் எட்டும் என்று வைராக்கிய தீரன் சொல்லுவான். நெற்றிக்கண் திறப்பது என்பது தற்கலத்தில் உள்ள வெல்டிங் வேலையைப் போன்று அறுக்கவோ, ஒட்ட வைக்கவோ முடியாததைப் போல் ஒப்பிடப்படுகிறது.

ஒரு அரசனுக்கு ஞானமானது கிடைத்துவிட்டால் அது உலகத்துக்கே பயன்படுகிறது. ஒரு யுத்தத் தலைவனுக்குக் கிடைத்தாலோ அது வேகத்தோடு பரவுகிறது. ஒரு குடும்பத்தலைவன் பெற்றகாலத்து ஒழுக்கத்தையும் குடும்பவாழ்க்கையில் ஒரு நிம்மதியையும் கொடுக்கிறது.

மனிதன் ஆண்டவனை அறியவோ, ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும்.

	"கடத்திலோர் இடத்தில் கறந்த ஞானப்பாலை
		கனலான மூலக்கனலால் மூட்டி மூட்டிக்
	கம்ப நுனிவழியாய்க் கண்மூக்கு மத்தியில் ஊட்டி ஊட்டிக்
		கருத்திற்கிசைந்த சுவையைக் கபாலம் ஏற்றி ஏற்றித்
	தன்மணிபோல ரசமணி திரள திரளக்
		கண்ணுக்கு தெரியாத திரை ஆறும் தன்
	திறமையால் திறக்கத் திறக்கத்
		தன் காரணத்தைத் தானே தெரியலாமே."


	"என் சொல்லை நெஞ்சால் கேளுங்கள், மிக தைரியசாலிகள் ஆவீர்கள்
	நெற்றியால் கேளுங்கள், மரணபயத்தை நீக்கிக் கொள்வீர்கள்
	தலையால் கேளுங்கள், அறிவாய் பிரகாசிப்பீர்கள்
	துரித நிதானத்தோடு நிதானியுங்கள், உங்களில் நீங்கள் எல்லாம் அறிவீர்கள்."

பிடரிக்கண்

பின் மூளையின் நடு இடமே பிடரிக்கண். இந்த இடத்தில் முதுகெலும்பின் உள் வழியாய் நெற்றிக்குக் கருவாகிய விந்து எனும் குண்டலினி வரும்போது இந்த இடத்தை உராய்ந்து கொண்டு வருவதால், அங்கு ஏற்படும் வெப்பத்திற்குச் சோமவட்டம் என்று பெயர். இப்பின் மூளையில்தான் நாம் கேட்டதும், பார்த்ததும், நினைத்ததும், நுகர்ந்ததுமான எல்லாப்பதிவுகளும், அணுக்களாகப் பதிந்து இருக்கின்றன.

உச்சிக்கண்

	"தென்னாடும் வடநாடும் கண்ணிடை நடுநாடும்
	கீழ்மூலநாடும் அறிவமுத நாடும், கூடிக்குலாவும்
	நன்னாடு அந்நாடு என்னாடு சென்னி நாடே.
	தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம்
	விட்டெ விட்டேன் பின் ஒன்றைத் தொட்டேன்
	அதை விடமுடியா மேல்நிலை சென்றேன்
	அது எது? அதுவே என்னிலை உணர்வு."

தலைக்குமேல் நடு மண்டை ஓட்டிற்குள்ளே அமைந்துள்ள இடமே உச்சிக்கண். நெற்றிக்கண் வழியாய் விந்தாகிய குண்டலினி இந்த இடத்தில் வந்து அழுத்துவதே உணர்வாகும். இதனால் ஏற்படும் இன்பமே பேரின்பம். உச்சிக்கு விந்து போகக்கூடிய வழி, தூண்டில் முள்ளின் நாவைப்போல் இருப்பதால் குருவில்லாமல் செய்யும் தவங்களால் விந்து உச்சிக்குச் சென்றால், சத்துள்ள விந்துவாய் இருந்து, பித்த உடம்பாய் இருந்தால் தலைப்பாரம், நோவு, துன்பம் தொந்தரவுகள் ஏற்படும். சிலபேர்கள் அறிவின் உணர்ச்சிக்கெட்டுப் பைத்தியக்காரனைப் போலாகிவிடுவார்கள்.

http://paranjothisky.org/ta/mahaan/cresteye.html
Advertisements

குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன?

தாவரங்கள் வெளிச்சக்தி, ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக வந்து முடிவாகிறது. அது போல் எல்லா ஜீவராசிகளும் அனேகவித நிறமுடைய இரத்த உணர்ச்சியாக வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனித உடம்பில் 13, 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்த நாடிகள் இருக்குமிடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கிறது. விந்துவின் உள்ளும், புறமும் இருக்கும் சக்தியே ‘குண்டலினி’ ஆகும்.

குண்டலினி யோகத்தின் நன்மைகள்

குண்டலினியால் பேரின்பம் பெற்று அனுபோக முறைப்படி கவனித்து வந்தால், ஐந்து அல்லது பத்தாண்டிற்குள் தன்னுடைய வயதைக் கூட்டிக்கொள்ளத் தனக்கு வல்லமை ஏற்பட்டுவிடுகிறது.

ஏழைக்கும் அரசனுக்கும் ராஜ தனவந்த எளியோர்களுக்கும் நிம்மதி நிலை ஊட்டும் சக்தி குண்டலினி.

நம் கன்னத்தைத் தொட்டு முத்தமிட்டுக்கொள்ளும் உணர்ச்சியால் அன்பு, உடன்பாடு ஆகிய ஒற்றுமையும் மோவாய்க்கட்டை, தாடியைத் தொட்டுத் தாங்கும் உணர்ச்சியால் சாந்தமும், அமைதியும், மீசையைத் தொட்டு முறுக்கி விடும் உணர்ச்சியால் மூர்க்கமும், வீரமும், கோபமும் ஏற்படுவது போல், பிடரி, நெற்றி, உச்சி இவைகளினுள் நமது விந்து என்னும் குண்டலினி உணர்ச்சி பட்டவுடன் முறையே ஞாபகம், ஆராய்ச்சி, நிதானம், வீரம், தைரியம், பேரறிவு, பேரின்பம் ஆகியவை நாளுக்கு நாள் மிகுதியாகின்றன.

அறிவின் கூர்மையால் நொடிப்பொழுதில் தன்னிலை உணர்தலாகிய ஞானம் அடையலாம். பேரின்ப சுகத்தைத் தன் குண்டலினியால் அடையலாம்.

குண்டலினியால் பேரின்ப நிலையை அடைவதற்கு பிரம்மச்சரிய விரதம், தனி இடம், ஜெபம், பிராணயாமம் தேவையில்லை. சொல்லுகின்ற, கேட்கின்ற நுண்ணறிவும், நுட்பமாக நோக்கும் திறமையிம் இருந்தால் போதுமானது.

குண்டலினி தீட்சை பெற்றுவிட்டால் அட்டமாசித்து விளையாடலாமென்றும், வேறு சாதரண உலோகங்களை உயர்ந்த தங்கமாகச் செய்யலாமென்றும், கூடு விட்டுக் கூடு பாயலாமென்றும், ஓரிடத்திலுருந்து கொண்டு அதே நேரத்தில் மற்றோரிடத்தில் உலாவலாமென்றும், வெகு தொலைவில் நடக்கும் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலுருந்தே பார்கலாமென்றும், சாகாமல் எப்பொழுதும் இருக்கலாமென்றும், ஆயிரக்கணக்கான மாதர்களுடன் போகம் செய்யலாமென்றும், தனக்கு மாத்திரம் தனியாக மோட்சம் இருக்கிறதென்றும், உணவில்லாது என்றும் வாழலாமென்றும், ரசமணி தானாகவே திரண்டுவிடுமென்றும், எதுவேண்டுமானாலும் செய்யலாமென்றும் எண்ணுவோர் குண்டலினி சக்தியின் பேரின்பத்தை அடைந்ததும் மேற்சொல்லப்பட்டவை எல்லாம் வியப்புறுவதற்காகச் செய்து கொண்ட கற்பனை என்று சிறிது காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்.

http://paranjothisky.org/ta/mahaan/kundalini.html

பொன்மொழிகள்-பரஞ்சோதி மகான்

 • ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன் உயர்ஞானத்தால் தன்னை அறிவான்.
 • புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள். துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டுவிடாதீர்கள்.
 • ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட அரைநிமிட ஆராய்ச்சியே மேல்.
 • அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.
 • பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவடும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!
 • பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி
 • நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசி அறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.
 • குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.
 • சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச் சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.
 • ஞானத்தின் மூதாதை துன்பம்,ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.
 • நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.
 • வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.
 • இருக்கும் இடத்தில் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்.
 • உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.
 • எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.
 • மயக்கம் தெளியாதவர்கள் – பக்தர்கள், யோகிகள், சித்தர்கள்.
 • மயக்கம் தெளிந்தவர்கள் – அறிவாளிகள், நாஸ்திகர்கள், முக்தர்கள்.
 • எண்ணம், செயல், சொல் சீராய் இருப்பாரே ஜெகதீசன்.
 • கனியைப் பேன்றது ஆன்மா; வாசனையைப் பேன்றது அன்பு; அழகைப் பேன்றது அருள்; சுவையைப் பேன்றது அறிவு.
 • உடலை நடத்துவது ஞாபகம், உடலில் உணர்வது அறிவு, உடலாய் இருப்பது நினைப்பு, நினைப்பாய் உள்ளது நான்.
 • இல்லறமில்லாத துறவறமில்லை; துறவறமில்லாத இல்லறமில்லை.