ஆழ் மனதின் அற்புத சக்திகள்

2
துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டியஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது.உதாரணத்துக்கு 1912-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். “கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது”.
அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின்பு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர்.
ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில்இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப்
போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.
(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி
விரிவாகப் பார்க்கலாம்) லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப்
பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.
1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation forResearch on the Nature of Man என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.
முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொருமைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.
அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
“விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது,” என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.
எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு “உண்மையில் இப்படி இருக்க முடியுமா?” என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?
மேலும் பயணிப்போம்…
நன்றி: விகடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s