Archives

சங்கமேஸ்வரர் கோவில் கோயமுத்தூர்

ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோவில் மிக பழமையான சிவாலயங்களில் ஒன்று

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுத ும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான ் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

கரிகாற் சோழன் புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய 36 சிவ தலங்களில் 31 சிவ தலம்…

இன்று பிரதோஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டோன் ..நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க…சிவாயா நமக

 

sanka

Advertisements

திருச்சுழி திருமேனிநாதர் கோவில்

அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த மகிமை வாய்ந்த திருக்கோவில். இக்கோவில் ஏறத்தாழ 1800 வருடம் பழமை வாய்ந்தது. சிவபெருமான் திருக்கைலாயத்தில் இருப்பதைக்காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததும் பெருமை பெற்றதும் இத்திருத்தலம் என்று எம்பெருமானே தீர்மானித்து இங்கு வந்து அருள்பாலிக்கும் இடம் இதுவாகும். சிவாலய தேவாரப்பாடல் பெற்ற மொத்தம் 274 சிவாலயங்களுக்குள் இது 202–வது திருத்தலமென்பதும் பாண்டிய நாட்டு சிவாலயங்களில் இது 12வது என்பதும் பெருமைப்படத்தக்கது.
இந்த தலத்தின் புராணப்பெயர் திருச்சுழியல் என்பதாகும். சிவபெருமான் மிகப்பெரிய பிரளய வெள்ளத்தைச் சுழித்து, பூமிக்குள் புகுத்தி அடக்கி, மக்களைக் காத்ததால், இந்த திருத்தலத்திற்கு, திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. பின்னர் திருச்சுழி என்று ஆனது. இந்த தலத்தில் சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றி உள்ளார்.

IMG_20140831_112353

IMG_20150114_175706
இங்கு திருமணக்கோலத்தில் எம்பெருமானை தரிசித்தால், கல்யாண வரம் கிட்டும் என்பதும் திருமணத் தடை நீங்கும் என்பதால் இத்தலத்திற்கு பலர் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு அனேக திருமணங்கள் நடை பெறுகின்றன. இங்கு திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் இருக்கும் என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் வந்து தங்கி வழிபட்டு சென்றது இக்கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பான அம்சமாகும்.இந்த தலத்தில் சுந்தரர் தங்கிய பொழுது அவரது கனவில், சிவபெருமான் இளம் பிராயத்தினராக கையில் பொற்செண்டும் நல்ல சுருள்முடியுடன் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு.
இங்குள்ள சிவலிங்கத்தை ஒரே ஒரு வில்வ மலர் கொண்டு அர்ச்சித்தாலும், அது அனைத்து சிவாலயங்களிலும் இருக்கும் எம்பெருமானுக்கு ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சித்ததற்கு ஒப்பாகும். மேலும், இத்தலத்தில் தரிசனம் செய்தால், எந்த இடத்திலும், எந்த நாட்டிலும் செய்த பாவங்கள் தீரும். ஆனால் இந்த தலத்தில் செய்த தீமை, பாவங்களை நிவர்த்தி செய்ய இங்கு மட்டுமே நிவர்த்தி கிடைக்கும்.வேறு எங்கும் நிவர்த்தி விமோசனம் கிடையாது. அது மட்டுமன்றி, இந்த திருத்தலத்தை நினைத்தாலும், பார்த்தாலும், கேட்டாலும் சிவ அனுகிரகம் கிட்டும். தெரிந்தோ, அறியாமலோ, செய்த பாவங்களுக்கு இங்கு வந்து மனமுருக வேண்டினால் அனைத்தும் புயல் காற்றில் வயப்பட்ட பஞ்சு போல் தீரும் என்பதும் ஐதீகம். இங்கு வந்து அன்னதானம், வேள்விகள் செய்தால் அதன் பலன் பன்மடங்கு அதிகமாகும்.
இந்த தலத்தின் அன்னையின் பெயர் துணைமாலை நாயகி. மதுரை மீனாட்சி அம்மனைப்போலவே காட்சி தருகின்றார். சுவாமி சன்னதியில் திருமேனிநாதராக சிவபெருமான் கருவறையில் அழகாக காட்சி தருகிறார். இந்த கருவறைக்கு எதிரில் அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து கவ்வை கடல் தீர்த்தம் இருக்கிறது. கொடி மரம், நந்தி, பலி பீடம் ஆகியவைகளும், மண்டபத்தின் இரு புறமும், விநாயகர், முருக பெருமான் உள்ளனர். கோவிலின் உள் பிரகாரத்தில், திருப்பதிகம் எழுதிய கல்வெட்டுக்கள் இருக்கின்றன.கருவறையில் உள்ள சுவற்றின் சிற்பமாக, தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கை அம்மனும் உள்ளனர்.
இத்தல புராணம் 18 புராணங்களில் ஒன்றான, “மஹா ஸ்கந்தபுராணம்” என்ற ஷேத்ர காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஆராவமுது சாரியார் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து எழுதி உள்ளார்.

ரமண மகரிஷி அவதரித்த அரிய தலம். சுவாமி தனது தென்னிந்திய யாத்திரையின் போது இங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்த பிரசித்தி பெற்ற தலம்.

IMG_20140831_112852

IMG_20140831_113911

IMG_20140831_113004
மூச்சுப்பிடி அம்மனுக்கு ஒரு தனி சன்னதி இருக்கின்றது. தாசி திருஷ முத்திருளி என்ற ஆன்மீக அம்மையாரின் சிலைதான் இது. இந்த அம்மனை மனதார வேண்டினால், சகல நோய்களும் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை. இவரது சன்னதி துணைமாலை அம்மன் பிரகாரத்தில் உள்ளது.
இரணியாஷனின் காற்று (ஸ்பரிசம்) பூமாதேவியின் மீது வீசி, அதனால் ஏற்பட்ட தோஷத்தைப்போக்க, பூமா தேவி வருடம் தோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்து அன்று, இங்கு ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இதனால் இத்தல ஈசனுக்கு பூமிநாதர் என்ற பெயர்க்காரணம் உண்டாயிற்று.
பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று தரிசிக்க மூன்று மாமாங்கம் நீராடிய பலன் உண்டு. 120 பிரதோஷம் கண்டவருக்கு மறு பிறவி கிடையாது.
கோவிலின் அனைத்து பகுதிகளிலும், பாண்டியரின் கல்வெட்டு பிரமிப்பை உண்டு செய்கின்றது. அனைத்தும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வண்ணம் பூசி மனதிற்கு ரம்மியத்தை  ஏற்படுத்து கின்றது. அந்த காலத்திலேயே, கல்குழாய்கள் மூலம் மேல் தளத்திலிருந்து  மழைநீர் வடிந்து கீழே உள்ள பெரிய தொட்டியில் விழுந்து அந்நீரை சேகரிக்க உள்ள திட்டத்தை காணும்போது வியப்பு உண்டாகிறது.
அர்த்த மண்டபமும், சபா மண்டபமும், அறுபத்தி மூன்று நாயன்மார்களும், விசாலாட்சி, சோமாஸ்கந்தர், சப்தமாந்தர்கள் உள்ளனர்.  ஸ்தல விருட்சமாக அரசு, மற்றும் புன்னை மரம் இருக்கிறது. இந்த திருத்தலத்தில் மொத்தம் 10 தீர்த்தக் குளங்கள் உள்ளன. இதில் ஒன்றான கோடி தீர்த்தம் என்றும் வற்றாமல் உள்ளதால் இதனுள் குழாய் பதித்து மின்சார பம்பு மூலம், திருச்சுழி மக்கள் பொது உபயோகத்திற்கு இன்றும் பயன்படுத்துவது அதிசயம் என்கின்றனர்.
தெய்வமணம் கமழும்
திருச்சுழியான் பூமியில்
வையம் கரையாவழிதனை
கண்டானே
தூய மனம் படைத்த
துணைமாலை பாகனே
தெய்வ மண கருதுவோருக்கு
தீமைகள் விலகிடுமே!
தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையும் கோவில் பக்தர்கள் வசதிக்காக திறந்து இருக்கும்.  முக்கிய விழாக்களாக பங்குனியில் பிரம்மோத்சவம், ஆடித்தபசு, பிரதோஷம், சித்திரை விஷு,கார்த்திகை சோம வாரம்,தைப்பூசம், சிவராத்திரி, மற்றும் பங்குனியில் தேரோட்டம் ஆகியவை கொண்டாடப்படுகிறது.
இது ராமநாதபுரம், சேது சமஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் ஒன்றாகும். தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது.

மாணிக்க வாசகர்

manikka
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையர், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அதை வாங்கிப்படித்த சுந்தரர் ,”இது பொய் என் பாட்டனார் எழுதிகொடுத்தது செல்லாது உனக்கென்ன பித்தா ? என்ன உளருகிறாய் என அந்த ஓலையை கசக்கிக் போட்டார் இனி உன்னிடம் ஆதாரம் இல்லை போ “;என்றார் உடனே முதியவர்,” நான் கொண்டுவந்தது படி ஓலை அசல் அங்கு வைத்திருக்கிறேன் இவன் இந்த படி ஓலையை நறுக்கிப் போட்டப்பவே தெரிந்திருக்கலாம்உண்மையை மறைக்கிறான் என்று ஆகவே இந்த அடிமையை என்னை கேட்காமல் திருமணம் செய்யக்கூடாது “; என்றார் அங்கிருந்தவர்களும்,” ஆமாம் முதியவர் சொல்வதில் ஞாயம் உள்ளது” என்றனர்.சரி பித்துப்பிடித்தவனே எங்கே மூலப் படி என சுந்தரமூர்த்தி கேட்க அதை நான் அங்கு வைத்திருக்கிறேன் வா என்னுடன் என, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். அசரீரியாக தன்னைப்பற்றிப் பாட சொல்ல என்னபாடுவது என கேட்க தன்னைப் பித்தனே என்று சொன்னாயே அதையே பாடு என்றாராம் சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மாணிக்கவாசகர் இறைவனை வழுத்தும் நூல்களில் பக்தனின் ஆன்மீக அனுபவத்தைச் சொற்களாகப் பிழிந்தெடுத்து, கசிந்துருகிப் பேசுபவை உலகில் மிகமிகச்சில நூல்களே உள்ளன. அவ்வாறு காணப்படும் சில நூல்களில் ஒன்றென இடம்பெறும் சிறப்புபெற்றது,
திருவாசகம். இதைப்பாடியவர் மாணிக்கவாசகர். அவரை மணிவாசகர் என்றும் அழைப்பர். இப்பெயர் இவருக்கு இறைவனால் இடப்பட்டதாகும். வரலாறு இவர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு. சொந்த ஊர், மதுரையின் வடகிழக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் இருக்கும் “தென்பறம்புநாட்டுத் திருவாதவூர்”. சம்புபாதாசிருதர், சிவஞானவதி என்பவர்களின் புதல்வர். இவருடைய பெயர் திருவாதவூரார். இதுதான் இவருடைய இயற்பெயரா அல்லது சொந்த ஊரை ஒட்டி ஏற்பட்ட காரணப்பெயரா என்பது தெரியவில்லை.
காலம்
இவருடைய காலத்தைக்கூட அறுதியாகக்கூற இயலவில்லை. அறுபத்துமுன்று நாயன்மார்களின் வரிசையில் இவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் இவர் பாடப்பெறவில்லை. ஆகவே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய சுந்தரருக்குக் காலத்தால் பிற்பட்டவராக இருக்கலாம். நம்பியாண்டார் நம்பியால் வகுக்கப் பட்ட திருமுறை வரிசையில் இவரது நூல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த நம்பியின் காலத்துக்கும் முற்பட்டவர். அரிகேசரி அல்லது அரிமர்த்தனன் என்னும் பாண்டியமன்னனின் காலத்தவர். பாண்டிய அமைச்சர் இவர் இளமையிலேயே ஒரு மாபெரும் மேதையாகத் திகழ்ந்தவர். ஆகவே மதுரைப் பாண்டிய மன்னன், இவரை அழைத்துவந்து தன்னுடைய மந்திரியாக வைத்டுக் கொண்டான். தென்னவன் பிரமராயன் என்னும் உயரிய விருதொன்றைத்தந்து பெருமைப் படுத்தினான். ஆன்மீக நாட்டம் அரசனுக்குக் அமைச்சராக இருந்தாலும் அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். தக்கதொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. குதிரைக் கொள்முதல் ஒரு நாள், தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் செய்த வாணிபத்தில் அரபு, பாரசீகக் குதிரைகள் முதன்மை பெற்றன. ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த “திருப்பெருந்துறை” என்னும் ஊரை அடைந்தார். அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, “சிவ சிவ” என்ற ஒலி கேட்டது. ஒலியை நோக்கிச் சென்றார். தடுத்தாட்கொள்ளல் அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு “மாணிக்கவாசகன்” என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோயிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் செலவிட்டு விட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லி யனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகரின் வருத்தத்தைத் தீர்ப்பதற்காக சொக்கேசப் பெருமான், காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் “சொக்கராவுத்தரெ”ன்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரைவணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். வைகையில் வெள்ளம்: பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல் அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அவ்வமயம் பிட்டுவாணிச்சியான வந்தியின் கூலியாளாகத் தானே வந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டு, அந்த அடி எல்லாவுயிர்களின் மேலும் விழுமாறு வழங்கி, தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப் போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார். சைவத்தொண்டு மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் “சிவபுராணம்”, “திருச்சதகம்” முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரைபுரிந்து திருவண்ணாமலையில் “திருவெம்பாவை”, “திருவம்மானை” ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமை மகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச் செய்த விடைகளே, “திருச்சாழல்” என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் “அச்சோப்பதிகம்” போன்ற சிலவற்றைப்பாடினார். பாவையும் கோவையும் ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவறை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், “பாவை பாடிய வாயால், கோவை பாடுக!”, என்று கேட்டுக் கொண்டான்.
ஈசன் எழுதிய
ஏடு மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், “இவை திருச்சிற்றம் பலமுடையான் எழுத்து”, என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, “அந்நூலின் பொருள் இவனே!”, என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் கலந்து, கரைந்து, மறைந்தார்

ஆன்மீக பயணம் -கோயமுத்தூர்

ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள்

கோயம்புத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30km தொலைவில்  முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டுக்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி, ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் என்ற பெயருடன்  இயற்கை சூழ அமைத்துள்ளது , ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர்  ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் குரு ஆவார்.

villian

வெள்ளியங்கிரி மலை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.

மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார். இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.

இம்மலையின் மீது ஆண்களும், வயது (பருவம்) அடையா சிறுமிகளும், மூதாட்டிகளும் ஏறி வழிபடுகின்றனர். இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர். கையில் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும். மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்

பட்டீஸ்வரர் கோயில் ,

தல வரலாறு
முற்காலத்தில் இங்கு ஒரு புற்றிற்குள் சிவன் லிங்கமாக எழுந்தருளியிருந்தார். தேவலோக பசுவான காமதேனு, நாரதரின் ஆலோசனைப்படி இங்கு வந்து, புற்றில் பால் சுரந்து சிவனை வழிபட்டது. ஒருசமயம் காமதேனுவின் கன்றான பட்டி, அறியாமல் புற்றை மிதித்துவிட்டது. தன் கன்று செய்த தவறை மன்னிக்கும்படி காமதேனு, சிவனை வேண்டியது. புற்றி லிருந்து வெளிப்பட்ட சிவன் இருவரையும் ஆசிர்வதித்தார். பட்டி மிதித்து வெளிப்பட்டதால் இவர், “பட்டீஸ்வரர்’ என பெயர் பெற்றார். “கோஷ்டீஸ்வரர்’ என்றும் இவருக்குப் பெயருண்டு. மூலஸ்தானத்தில் லிங்கத்தின் பின்புறம் காம தேனுவின் சிற்பம் உள்ளது.
கனகசபை நடராஜர்
சிவனின் நடனம் காண விரும்பிய மகாவிஷ்ணு பட்டிமுனி என்ற பெயரில் இடையனாகவும், பிரம்மா கோமுனியாக பசு வடிவிலும் இங்கு வந்தனர். சுவாமி நடராஜராக வந்து அவர்கள் முன் நடனமானடினார். இந்த நடராஜர் இங்குள்ள கனகசபையில் எழுந்தருளியிருக்கிறார். அருகில் கோமுனி, பட்டிமுனி இருக்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று நடனக்காட்சியருளும் வைபவம் நடக்கும். தத்துவங்கள் மற்றும் வேதத்தை குறிக்கும் தூண்கள், 3 பஞ்சாட்சர படிகள் என விசேஷமாக அமைந்த சபை இது. இச்சபையில் உள்ள தூண்கள் வேலைப்பாடு மிக்கவை.
வருடத்தில் 10 அபிஷேகம்!
நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறைதான் அபிஷேகம் நடக்கும். ஆனால், இங்கு 10 முறை நடக்கிறது. வழக்கமான நாட்கள் தவிர, தீபாவளி, மார்கழி திருவாதிரை முடிந்த நான்காம் நாள், பங்குனி உத்திரம் மற்றும் உத்திரத்திற்கு அடுத்த இரண்டாம் நாள் ஆகிய நான்கு நாட்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
அம்பாள் இல்லாத கோயில்
கோயிலுக்கு வடக்கே சற்று தூரத்தில் இறவாப்பனை மரத்தின் அருகில் பிரம்மா பூஜித்த வடகயிலாயநாதரும், தென்திசையில் மகாவிஷ்ணு பூஜித்த தென்கயிலாய நாதரும் கோயில் கொண்டு உள்ளனர். இவ்விரு கோயிலிலும் அம்பிகை கிடையாது.
கொம்பு தீர்த்தம்
பட்டீஸ்வரரை வழிபட்ட காமதேனு தன் கொம்பால் பூமியில் தோண்டி உண்டாக்கிய “சிருங்க தீர்த்தம்’ (சிருங்கம் என்றால் கொம்பு) இங்குள்ளது. இந்த தீர்த்தத்தாலேயே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
மரங்களின் தத்துவம்
இறவாப் பனை, பிறவாப் புளி என்ற மரங்கள் இத்தலத்தில் உள்ளன. பட்டீசுவரரை தரிசிப்பவர்கள் வாழும்போது இறவாத (அழியாத) புகழுடனும், வாழ்க்கைக்கு பிறகு மீண்டும் பிறப்பில்லாத நிலையையும் அடைவர் என்பதை இம்மரங்கள் உணர்த்துகின்றன.
கல்வி தெய்வங்கள்
இங்குள்ள பைரவர் ஞானம் தருபவராக நாய் வாகனமின்றி காட்சி தருகிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில், விஜயதசமியன்று குழந்தைகளின் நாக்கில் எழுத்தாணியால் எழுதும் “அட்சராப்பியாச வைபவம்’ நடக்கிறது. வியாழக்கிழமைகளில் பைரவர், தெட்சிணாமூர்த்தி சன்னதிகளில் கல்விக்காக வேண்டுகிறார்கள்.
மனோன்மணி
சக்தியின்றி சிவமில்லை என்பதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் மூலஸ்தானத்திற் குள்ளேயே ஒரு அம்பிகை இருப்பாள். இவளை வெளியிலிருந்து தரிசிக்க முடியாது. “சிவனின் மனதிற்குள் இருப்பவள்’ என்ற பொருளில் இவளை மனோன்மணி என்று அழைப்பர். இந்தக் கோயிலை பொறுத்தவரை இவளை நம்மால் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் இவளுக்கு சன்னதி இருக்கிறது..
தீவட்டி சேவை
இக்கோயிலில் இரண்டு தீவட்டிகள் உள்ளன. இங்கு வந்த மன்னர் ஒருவர், சுவாமிக்கு மரியாதை செய்யும்விதமாக தீவட்டிசேவையை துவங்கி வைத்தார். தினமும் மாலையில் இந்த தீவட்டிகளை கொளுத்தி, கோயில் எதிரேயுள்ள தீபஸ்தம்பத்தை சுற்றி வந்து, பின்பு அதை தலைகீழாக கவிழ்த்து வைக்கின்றனர். சுவாமிக்கு மரியாதை செய்யும்விதமாக இவ்வாறு செய்வதாகச் சொல்கிறார்கள்.
திருப்பொற்சுண்ணம்
கிராமங்களில் விழா கொண்டாடும்போது மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வர். இதைப்போலவே இக்கோயிலில் மார்கழி திருவாதிரை விழாவின்போது சுவாமி மீது மஞ்சள் நீர் தெளித்து, பின் அதையே பக்தர்கள் மீது தெளிக்கின்றனர். இந்த மஞ்சள் நீருக்கு, “திருப்பொற்சுண்ணம்’ என்று பெயர். இதற்காக பிரத்யேகமாக உள்ள உரலில் மஞ்சளை பொடியாக்குகின்றனர்.
காட்டிக்கொடுத்த நந்தி
தேவாரம் பாடியவரும், சிவனின் நண்பருமான சுந்தரர் சில விஷயங்களுக்காக பொருள் கேட்பதற்காக இங்கு வந்தபோது, அவரிடம் விளையாட்டு காட்ட விரும்பிய சிவன், அம்பிகையுடன் விவசாயி வேடம் தரித்து அருகிலுள்ள வயலுக்கு சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்தார். கோயிலுக்குள் சென்ற சுந்தரர் இறைவனைக் காணாமல் திகைத்தார். தன் இறைவனான சிவனின் பக்தன் படும் வேதனையைத் தாளாத நந்தி, தான் மாட்டிக்கொள்வோம் எனத்தெரிந்தும், சிவன் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார். வயலுக்குச் சென்ற சுந்தரர், சிவனை வணங்கி பதிகம் பாடி பொருள் கேட்டார். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் கோபம் கொண்ட சிவன், மண்வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்தார். ஆனாலும், நந்தி வருந்தவில்லை. தன்னை வருத்தியேனும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது. இந்நிகழ்ச்சியின் அடிப்படையில் இங்குள்ள நந்தியின் தாடை வெட்டுப் பட்ட நிலையில் இருக்கிறது.
நாற்று நடும் திருவிழா
ஆனியில் நாற்று நடும் திருவிழா இங்கு விமரிசையாக நடக்கிறது. விழாவின் முதல் நாள் கோயில் அருகிலுள்ள வயலில் விதை நெல் விதைப்பர். தினமும் காலை, மாலையில் நாற்றுக்கு பூஜை நடக்கும். விழாவின் 9ம் நாளில் அர்ச்சகர்கள் நாற்று நடுவர். இவ்வேளையில் கேதாரீஸ்வரர் (சிவன்), அம்பாள், சுந்தரர் மூவரும் வயலுக்கு எழுந்தருளுவர். சுந்தரர் இங்கு வந்தபோது சிவன் விவசாயியின் வேடத்தில் நாற்று நட்டதன் நினைவாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்வாண்டு இந்த விழா ஜூன் 28ல் நடக்கிறது. மறுநாள் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம் நடக்கும்.
பயிர்களின் தாய்
விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு பச்சை நாயகி என்று பெயர். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இவளது சன்னதியில் விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் இவளது சன்னதியில் விவசாயம் செழிக்க விசேஷ பூஜை நடக்கும்.
அம்பாள் சன்னதி முன்புள்ள துர்க்கை சிலை, நடராஜரின் பாத தரிசனத்தைக் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் வரதராஜப் பெருமாளுக்கும் சன்னதி உள்ளது.
சிவாலயத்தில் சொர்க்கவாசல்
பெருமாள் கோயில்களில் தான் சொர்க்கவாசலைக் காண முடியும். ஆனால், இந்த சிவாலயத்திலும் சொர்க்கவாசல் இருக்கிறது. பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரையன்று நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோர் வீதியுலா செல்வர். கோயிலுக்குத் திரும்பும் போது, சிவகாமி அம்பாள் மட்டும் இந்த வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்குரிய வாசலில் தங்கையான அம்பிகை உரிமையுடன் நுழைவதாகச் சொல்கிறார்கள்.
அரூப சித்தர்
சிவன் சன்னதிக்குப் பின்புறம் விஸ்வநாதர்,  விசாலாட்சி சன்னதிகள் உள்ளன. இவற்றுக்கு நடுவேயுள்ள சன்னதியில் தண்டாயுதபாணி காட்சி தருகிறார். அருணகிரியாரால் பாடல் பெற்றவர். இந்த சன்னதி அருகிலுள்ள வில்வ மரத்தடியில் கோரக்க சித்தர் அரூபமாக (உருவமில்லாமல்) அருளுகிறார்.
நாட்டியத்துளிகள்…
* நாவுக்கரசர், சுந்தரர் இருவராலும் பாடப்பெற்ற தலம்.
* இங்குள்ள காஞ்சிமாநதியில் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள்.
* கொடிமர மண்டபத்தின் மேலே நாயன்மார்களின் வரலாற்று ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. கனகசபையின் விதானத்தில் சுழலும் தாமரையுடன் கூடிய கல்சங்கிலி வேலைப்பாடுமிக்கது.
* பிரகாரத்தில் ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் இருக்கிறார்.
இருப்பிடம்
கோயம்புத்தூரில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் பேரூர் உள்ளது. காந்திபுரம், டவுன்ஹாலில் இருந்து பஸ்கள் செல்கின்றன.
திறக்கும் நேரம்
காலை 6- 1 மணி, மாலை 4- இரவு 9 மணி.

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.

IMG_20150111_101909

முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

IMG_20150111_105626

பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில்

 
பாம்பாட்டி சித்தர் சன்னிதி

இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.[2] உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.

IMG_20150111_105647

திருப்புகழ் பாடல்

அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.[6]

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

பொன்னுது அம்மன்

பொன்னுது அம்மன் கோவில் குகை போன்ற அமைப்பில் நீருக்குள் அமைந்துள்ளது,சிறு ஊற்று போன்று ஆண்டு முழுவதும் வருகிறது ,மலை கலங்களில் அருவி போன்று நீர் அதிகமாக வருமாமம் ,இது கோயமுத்தூர் அருகில் சுமார் 25கேயெம் தொலைவில் உள்ளது

காஞ்சிபுரம் பயணம்

கோவில்களின் நகரம்  என்றாலே காஞ்சிபுரம் தான் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தடுக்கி விழுந்தால் கூட அங்கு ஏதாவது ஒரு கோவில் இருக்கும். இங்கு புகழ்பெற்ற கோவில்கள் மட்டும் மொத்தம் 165 கோவில்கள் உள்ளன. காஞ்சிபுரம் பட்டு உலகப் பிரசித்திப் பெற்றவை. அறிஞர் அண்ணா பிறந்த  ஊரும் இதுதான்.

அவற்றில் சிறப்பு வாய்ந்த 4 கோவில்கள் இவை.
காஞ்சி காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், கைலாசநாதர், வரதராஜபெருமாள்.

காஞ்சி காமாட்சியம்மன் கோவில்

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்று அனைவராலும் சொல்லப்படுவதுண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் இது. இந்தக் கோவிலை ஆதிசங்கரர் 8&ம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன.
காமாட்சி அம்மன் ஒரு கையில் கரும்பையும், மற்றொரு கையில் கிளியையும் ஏந்தி, பத்மாசனத்தில் வீற்றிருப்பாள்.அவளது உக்கிரத்தை தணித்தவர் தான் ஆதிசங்கரர்.
இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் தெப்பக்குளமும், 100 கால் மண்டபமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் இருந்து பார்த்தால், தங்கத்தால் வேயப்பட்ட கோபுர விமானம் தகதகவென்று காட்சியளிக்கும்.

ஏகாம்பரநாதர் கோவில்

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த கோபுரம் இந்தக் கோவிலில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்று. 2&ம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவிலுக்கு பிற்பட்டது இந்தக் கோவில்.
இந்தக் கோவிலில் காணப்படும் மற்றொரு அதிசயம் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரம். இந்தக் கோவிலில் 1008 சிறிய சிவலிங்கங்களுடன் உள்ள பெரிய சிவலிங்கம் ஒன்று காண்பவர்களை வியக்க வைக்கிறது. மேலும் பல்வேறு வடிவங்களில் சிவலிங்ககங்கள் கோவிலைச் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன.

IMG_20141212_152011

வரதராஜப் பெருமாள் கோவில்

இது வைணவத் திருத்தலங்களில் ஒன்று. 31வது திவ்ய தேசம் இது. முதலாம் குலோத்துங்கச் சோழனும், விக்கிரம சோழனும் இந்தக் கோவிலை விரிவுபடுத்தியுள்ளனர். அவர்களுக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினர். கல்யாண மண்டபம் 8 வரிசைகளைக் கொண்டது.

ஒவ்வொரு வரிசையிலும் 12  தூண்கள் உள்ளன. அவற்றில் 96 சிற்பக்கலைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே கல்லால் ஆன  தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள், பல்வகை சிற்பங்கள் இந்தத் தூண்களை அலங்கரிக்கின்றன. மற்றொரு அதிசயம். 100 கால் மண்டபம். இந்த மண்டபத்தின் நான்கு முனைகளிலும் கல்லால் ஆன சங்கிலிகள் தொங்க விடப்பட்டுள்ளன. கிழக்குக் கோபுரம் 9 நிலைகளில், 180 அடி உயரத்துடன் காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் தங்கப்பல்லி ஒன்று அச்சு அசலாக பல்லியைப் போன்றே சுவரின் மேற்புறத்தில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்லியைத் தரிசிப்பவர்களுக்கு பல்லி சம்பந்தமான அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன என்பது பக்தர்களின் ஐதீகம்.

கைலாசநாதர் கோவில்

தென்திசை கைலாயம் என்று அழைக்கப்படும் சிறப்புடையது இந்தக் கோவில்.
ராஜசிம்மன் கட்டிய அழகிய சிற்பங்களைக் கொண்டுள்ளது. இவர் முதலில் கட்டியது மாமல்லபுரம் கடற்கரைக் கோவில். பல்லவர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு இந்தக் கோவில். அழகிய நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரம் காணப்படுகிறது. அங்கு ஒருவர் மட்டும் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அமைதியான இடம் சிற்பங்களுக்கு இடையே செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலின் உள் கைலாசநாதரைத் தரிசித்து விட்டு வருவதே விசேஷம்தான்.

IMG_20141212_142354

கைலாசநாதரைத் தரிசித்தபின்னர், அதன் உட்பிரகாரத்தைச் சுற்றுவதற்கான  நுழைவாயில் குகையைப் போன்ற குறுகலான அளவில் உள்ளது. நுழைந்து உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வெளியே வரும்போது அதன் வெளிவாயிலும் குகைபோன்று தரையோடு தரையாக ஒட்டியுள்ளது. வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் நேர்ந்தாலும் சமாளிக்க வேண்டும் என்பதையே இந்த அமைப்பு காட்டுவதாக அமைந்துள்ளது.