Archives

சுவாமி சிவானந்தர்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.
1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.
பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள்
இடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள்! இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர்.
நாத்திகனுக்கே முக்கியத்துவம்
தரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தனர். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர்.
வாங்க குழந்தையே!
யாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்..
கொலைகாரனிடமும் இறைவன்
1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார்.
மவுனமான நேரம் மனதில் ஏது பாரம்
*  எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.
*  மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
*  தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
*  தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
*  உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.
*  நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.
*  கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.
* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.
*  உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.
*  பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
*  உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.
*  பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.
*  கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
*  கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.
-இதயத்தை இதமாக்குகிறார் சிவானந்தர்
Advertisements

கோவில்களில் 3 விதமான இயக்க நிலைகள்

நாம் ஆன்மிகம் சம்பந்தமான ஆய்வில் இருக்கிறோம். ஆன்மிகம் என்பது இந்த ஆன்மா இந்த பிரபஞ்சத்தோடு உள்ள தொடர்பையும் நாம் இயங்கி கொண்டிருக்க காரணம் என்ன என்பதையும் அதாவது நம்மை எது இயக்கி கொண்டு இருக்கிறது என்பது பற்றி அறிய தொடங்குவது மட்டுமே. இதுவே ஆன்மீகத்தின் முதல் படி ஆகும்அப்படியானால் நம்மை இயக்குவது எது? நம் உடல் ஆனது பஞ்ச பூதங்களால் ஆனது. ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர்,மண் ஆகியன சரியான விகிதத்தில் கலந்து உருவானதே இந்த உடல். இந்த ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செல்களாகி மாறி கோடிக்கணக்கான செல்கள் சேர்ந்து இந்த சரிரம் உருவாகி உள்ளது. இந்த உடலின் அனைத்து பாகங்களும் செல்களால் ஆனது. ஆக இந்த பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய பஞ்ச பூத கலவையும் நாமும் ஒன்றே. அதைதான் அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்தில் உண்டு என்று நம் பெரியோர் சொன்னார்கள். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ள நாம் எடுக்கும் ஒரு மார்க்கமே ஆன்மிகம் ஆகும். ஆக ஆன்மிகம் என்பது கோவில்கள் செல்வதோ பூஜை புனஸ்கரங்கள் செய்வதோ வழிபாடுகள் செய்வதோ இல்லை. இந்த ஆன்மாவை

சுத்த படுத்தி அதாவது தூய்மைபடுத்தி அதன் மூலம் நாம் எதன் மூலம் இயங்குகிறோம் என்பதை நாம் உணர வேண்டி ஆராய தொடங்கும் ஒரு மார்க்கமே ஆன்மிகம் ஆகும்.அப்படியானால் கோவில்களும் பூஜை முறைகளும் ஏன் உண்டானது?நாம் முன்பு சொன்னது போல் கோவில்களில் 3 விதமான இயக்க நிலைகள் உண்டு. 1.எந்திரம் 2.மந்திரம். 3.தந்திரம். இந்த மூன்றையும் பற்றி ஏற்கனவே முந்தய பதிவில் கண்டோம். அதாவது ஒரு ஆலயம் கட்டுவதற்கு முன் அதன் அங்கங்கள் என பெரியோர்கள் விக்ரகங்கள்,எந்திரம்,மந்திரம்,தந்திரம் முதலியவை உள்ளடங்கியது தன என வகுத்து அதன் பின்னர் அது அமையும் இடம் பற்றி தீர்மானித்தனர்.பெரும்பாலும் ஆலயங்கள் ஊருக்கு ஒதுங்கியும் ஆறு குளங்கள் போன்றவற்றின் கரையிலும் மட்டுமே அமைத்தனர்.ஏனெனில் அங்கு இருக்கும் அமைதியும் தேவை என்று கருதியே அவ்வாறு அமைத்தனர்.

ஆலயங்கள் அமைந்த விதம்.1.முன்கொபுரம் (பூதான்மா)

2.மகாபலிபீடம். (அந்தரான்மா)
3.கொடிமரம். (தத்துவான்மா)
4.மூலவர். (ஆச்சார்யர்)
5.பரவெளி. (பரமான்மா)

இந்த விதத்திலேயே ஆலயங்கள் அமைந்து உள்ளன. அதாவது நாம் முன்பு சொன்னது போலவே இங்கு தத்துவங்கள் மட்டுமே உள்ளது.அதை நாம் உணர்ந்து ஆலயங்கள் செல்ல வேண்டும் என்பதே முன்னோர்களின் லட்சியமாக இருந்தது.

அதாவது நாம் ஆலயங்களுக்கு செல்லும் முன் எவ்வாறு செல்ல வேண்டும் என நம் பெரியோர்கள் வகுத்து வைத்தனர். எவ்வாறெனில்
1. ஒரு மனிதன் எனப்படுபவன் இந்த பூத உடலை தான் என எண்ணி அதுவே உண்மை என நம்பி இருக்கும் நிலையில் இருப்பது பூதான்மா.அது அல்ல உண்மை என்று உணர்ந்து பூத உடல் நிஜம் இல்லை என உணர்ந்து அந்த எண்ணத்தை முன் கோபுரத்தின் முன்னால் விட்டுவிட்டு அதற்கு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.

2.அடுத்த படியாக மனிதனை ஆட்டி படைப்பது விருப்பு வெறுப்பு இச்சை போன்றவைகள் ஆகும் இதற்கு அடிமைப்பட்ட நிலையில் அவன் அந்தரான்மா எனபடுகிறான். அவ்வாறு இருக்கும் நிலையில் அவன் இச்சாதி விசயங்களை எல்லாம் முன்பலிபீடம் முன்பாக எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு அதாவது பலி கொடுத்துவிட்டு அதற்கு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.

3.அவ்வாறு பலி கொடுத்து விட்டு அடுத்து செல்லும்போது அவன் காண்பது கொடிமரம் அதாவது தத்துவான்மா நிலை.இது யாதெனில் இந்த உலகில் இன்பங்களை விட துன்பங்களே அதிகம்.அது என் ஆசைகளினால் வந்தது என உணர்வதே ஆகும்.அவ்வாறு உணர்ந்த பின்னர் தன் உண்மை நிலையை உணர்ந்த பின்னர் அதற்கு காரணமான ஆசைகளை எல்லாம் விடும் நிலைக்கு வருவதே அந்த இடம் உணர்த்துகிறது.கொடிமரத்தை நெருங்கும் பொது நாம் ஒரு தத்துவ நிலைக்கு வந்துவிடுகிறோம்.

4.மூலவர் அதாவது ஜீவான்மா இது நம் ஜீவனின் நிலையை குறிக்கிறது.
அதாவது மேலே சொன்ன அனைத்துமே என் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறது என உணர்ந்து இவைகளை களைந்ததால் தான் நான் என் ஆன்மாவின் எதார்த்த நிலையை உணர்ந்தேன் என நினைத்து 5 வது நிலையான மந்திரான்மா எனப்படும் நிலையில் இருக்கும் ஆச்சாரியார் இருளில் மூழ்கி இருக்கும் அந்த மூலவரை ஜோதியில் காட்டும்போது அந்த மூலவர் எனப்படும் அந்த ரூபத்தை நாம் உற்று கவனிப்பதின் மூலம் நம் பரமான்மா அதாவது நம் இறை நிலையை உணரும் நிலைக்கு வருவோம்.இதையெல்லாம் முழுவதுமாக தெரிந்த ஒருவரே நல் ஆச்சாரியார் எனபடுவர்.வரும் மனிதர்களுக்கு இந்த நிலைகளை சரியாக உணர்த்திகொடுத்து அவர்களின் ஆன்மாவின் நிலையை புரிய வைத்து இந்த ரூபங்கள் ஏன் உண்டாயின என்று தெளிவு செய்வதே அவர்களின் பணி அவர்களே உண்மையான ஆச்சாரியார் எனப்பட்டனர். ஆனால் தற்போது எங்கே உண்மையை உணர்ந்து எல்லோரும் விழிப்பு நிலைக்கு வந்து நாம் பிழைக்க முடியாமல் போய்விடுமோ என எண்ணி உழைக்காமல் பிழைக்க எண்ணும் சிலர் இந்த தத்துவங்களை யாருக்கும் உணர்த்தி கொடுக்க தயார் இல்லை.

ஆலயங்களில் அமைந்த சிலா ரூபங்கள் அனைத்துமே நாம் பரமான்ம நிலையை உணர்த்துவதற்காக உண்டானதே.அங்கு உள்ள ரூபங்கள் ஒரு நாளும் செயல் படாது. அதை நாம் இந்த 5 நிலைகளை கடந்து நம் வலப்பக்க மூளைக்கு வேலை கொடுத்து அதை நம் வலபக்க மூளையின் மூலமாக உற்று நோக்கி பதிய வைத்து அதன் மூலம் நாம்
இறை நிலையை உணர்ந்து அதுவாகவே மாறவேண்டும் என்பதே அதன் தத்துவங்கள். வழிபாடு என்றால் இந்த வழியை நாம் பின்பற்றி செல்வதே ஆகும்.வழிமுறைகளை உணர்ந்து அதை முறை படுத்தி நாம் செய்வதே வழிபாடு ஆகும். இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக சொல்லப்பட்டது அல்ல அனைவரும் உணர வேண்டும் தெளிய வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டது. எனவே நாம் ஆலயம் என்றால் என்ன என்பதை சரியாக உணர்ந்து செல்லவேண்டும் என்பதே என் நோக்கம்.ஆலயம் என்றால் நம் இந்த 5 நிலைகளையும் உணர்ந்து 6 வது நிலைக்கு தன்னை லயப்படுத்திகொள்வதே ஆகும்.

குருவே சரணம்

copy from  https://www.facebook.com/groups/siddharprapanjam/